துறவறம் செல்லும் இளம்பெண், சிறுவன்: ஜெயினர்கள் கொண்டாட்டம்

திருப்பத்தூர்: வேலூரை சேர்ந்த 14 வயது சிறுவன், திருப்பத்தூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் துறவிகளாக மாறுவதை ஜெயினர்கள் ஊர்வலமாக சென்று கொண்டாடினர். ஜெயின் சமூகத்தில் துறவியாக மாறுபவர்கள் மொட்டை அடித்துக்கொள்வார்கள். தங்களுக்கான உணவை வீடு வீடாக சென்று யாசகமாக கேட்டு உட்கொள்ள வேண்டும். துறவியாக மாறியவுடன் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு எங்கு சென்றாலும் செருப்பு அணியாமல் நடந்து செல்ல வேண்டும். அவர்கள் உடுத்திக் கொள்ளும் உடைகள் கிழிந்தால் அதனை அவர்களே தைத்துக் கொள்ள வேண்டும். துறவி ஆனவுடன் கோயில்களுக்கு சென்று வழிபாடுகள் நடத்தி பொதுமக்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்.

இவர்களுக்கு குடும்பம், உறவுகள் என எதுவும் இருக்கக்கூடாது. அவர்களிடம் இருக்கும் பணம், நகை, சொத்துக்கள் அனைத்தையும் மற்றவர்களுக்கு வழங்கி விடுவார்கள். இந்நிலையில் திருப்பத்தூர் செட்டித்தெருவை சேர்ந்த ரத் தன்சந்த் என்பவரது மகளான சுஷ்மா(27), வேலூரை சேர்ந்த சுனில்குமாரின் மகன் சம்ரத்(14) ஆகிய இருவரும் துறவறம் செல்கின்றனர். இவர்களை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ஜெயின் சமூகத்தினர் நேற்று திருப்பத்தூரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது மேள தாளங்கள் முழங்க துறவறம் செல்வதை கொண்டாடினர்.

தொடர்ந்து இன்று துறவறம் ஏற்கும் இருவருக்கும் பரம பூஜ்ய ஆச்சாரிய பகவான் ஸ்ரீமணிபிரப சூரிஸ் வர்ஜி சாத்வி, ஸ்ரீசுலோசனா ஸ்ரீஜீஅர்ன் ஆகியோர் சத்திய வாக்கு கொடுத்து, துறவறம் ஏற்க செய்வார்கள் என ஜெயின் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த துறவறம் ஏற்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஜெயின் சமூகத்தினர் வந்து ஆடல், பாடல்களுடன் ஊர்வலமாக சென்று வருகின்றனர். துறவறம் ஏற்கும் பெண்ணிடம் ஆசியும் பெற்று வருகின்றனர்.

The post துறவறம் செல்லும் இளம்பெண், சிறுவன்: ஜெயினர்கள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: