செங்கல்பட்டில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் திரவுபதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு வழங்கி தரிசனம் செய்தனர். பின்னர் அக்கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு நகரில் உள்ள மேட்டுத்தெருவில் ஸ்ரீ தர்மராஜா மற்றும் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 23 நாட்கள் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார ஆராதனை மற்றும் வீதியுலா நடைபெறும். ஒவ்வொரு நாளும் மக்கள் உபயம் செய்து அம்பாளுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம். இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த மே 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் கிருஷ்ணன் பிறப்பு, திரவுபதி திருமணம், சுபத்திரை திருமணம், அபிமன்யு யுத்தம், ஸ்ரீகிருஷ்ணன் தூது, கர்ணமோட்சம் என வரும் 12ம் தேதி வரை அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறுகின்றன.

நேற்று மாலை நத்தம், பெரியநத்தம், குண்டூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க, சீர்வரிசை பொருட்கள் மற்றும் வாண வேடிக்கையுடன் பத்ரகாளி, காந்தாரி, பாஞ்சாலி உள்பட பல்வேறு வேடமிட்டபடி திரவுபதி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு மண்ணினால் செய்யப்பட்ட துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துரியோதனனின் சிலைமீது அர்ஜுனன் நின்று வதம் செய்யும் காட்சி தத்ரூபமாக அரங்கேறியது. பின்னர் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டி தீ மிதி விழாவில் பங்கேற்று, அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

The post செங்கல்பட்டில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: