திருமயத்தில் நூற்றாண்டு கண்ட அரசு பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மும்முரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருமயம்: திருமயத்தில் நூற்றாண்டு கண்ட அரசு பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. தேர்தலின் போது மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க திமுக கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றி விட்ட நிலையில் மீதமுள்ள ஒரு சில வாக்குறுதிகளும் ஆட்சி காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து வருகிறார். பொதுவாக மாநிலத்தின் வளர்ச்சி, மக்களின் தேவைகளை அறிந்து வாக்குறுதிகளை வழங்கி திமுக ஆட்சியைப் பிடித்தது. கட்சித் தலைமை தேர்தலின் போது மக்களிடம் பொதுவான வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தாலும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களை திருப்திப்படுத்துவது அந்தந்த தொகுதி வேட்பாளர் மட்டுமே. அப்படியாக திருமயம் தொகுதியில் கடந்த இரண்டு முறையும் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அப்பகுதி மக்களின் பெரும்பான்மையான நம்பிக்கையோடு வலம் வருகிறார்.

இவர் தேர்தலின் போது ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதிகளை நம்பி பொதுமக்கள் வாக்கு அளித்தனர். அதன்படி அமோக வெற்றி பெற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் தொகுதியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது திருமயத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இதனை கடந்த முறை ஆட்சி செய்த பல்வேறு ஆட்சியாளர்களும் நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதிகள் அளித்தாலும் அவை அனைத்தும் வாக்குறுதிகளாகவே இருந்து வந்தது. இதனிடையே கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே போல் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் திருமயம் தொகுதி வாக்காளர்களிடம் திருமயத்தில் அரசு கலை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதேபோல் திமுக சார்பில் போட்டியிட்ட ரகுபதியும் வாக்குறுதி அளித்தார். அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருமயத்தை சுற்றிலும் பெரும்பாலும் கிராமங்களே அதிகமாக உள்ளன.

அவர்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் தலைமுறை பட்டதாரிகள் உள்ள நிலையில் மேல்படிப்பை தொடங்க முடியாமல் பல இளைஞர்கள் பள்ளிப்படிப்புடன் நிறுத்துவதாக அறிந்தேன். மேலும் மேற்படிப்பை தொடங்க திருமயம் சுற்றியுள்ள கிராம இளைஞர்கள் காரைக்குடி, பள்ளத்தூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால் நேரம், பணம் விரயமாகிறது. இதனை அறிந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் திருமயத்தில் அரசு கலைக்கல்லூரி தொடங்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து வந்தார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் மாநிலத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியதன் அடிப்படையில் திருமயத்தில் கலை கல்லூரி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதேபோல் திருமயம் பகுதி மக்களின் மற்றொரு கோரிக்கையான திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதாவது திருமயம் அரசு பள்ளி 1922ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது அப்பகுதியில் உள்ள நூற்றாண்டு கண்ட ஒரு சில பள்ளிகளில் திருமயம் அரசு பள்ளியும் ஒன்று. நூற்றாண்டு கண்டாலும் பள்ளியின் பழமையான கட்டிடம் ஆங்காங்கே சேதமடைந்து காணப்பட்ட நிலையில் இதனை இடித்துவிட்டு வேறு கட்டிடம் கட்ட வேண்டும் என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு அப்பகுதியிலேயே சுமார் 30 அரைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. அதேசமயம் பள்ளியின் வரலாற்றை அறிந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பள்ளியின் வரலாறு குறித்து எடுத்துக் கூறினார். இதனை அறிந்த துறை அமைச்சர் பள்ளியின் பழைய கட்டிடத்தை இடிக்காமல் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்பதை அறிந்து திருமயம் அரசு பள்ளி பழைய கட்டிடத்தை புணரமைப்பு செய்ய ரூ.2.35 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது திருமயம் பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சம்பந்தப்பட்ட அரசு பள்ளி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளியின் பழமை மாறாமல் பழைய ஓடுகள், மர சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு, சுவரின் மேல் பூச்சுக்கள் மட்டும் முற்றிலுமாக உடைத்து எடுக்கப்பட்டதோடு வகுப்பறை தளங்களும் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிமெண்ட் பூச்சுகள் இல்லாமல் பழமையான முறையில் சுண்ணாம்பு பூச்சுகளால் பள்ளி புனரமைப்பு பணி நடைபெறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இன்னும் ஒரு சில மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவுற்று திறப்பு விழா காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post திருமயத்தில் நூற்றாண்டு கண்ட அரசு பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மும்முரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: