ஒருமாதம் கடந்தும் கலவரம் நீடிப்பு மணிப்பூரில் 3 பேர் சுட்டுக்கொலை

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நேற்று 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்டி இன மக்கள் இடையே மே 3ம் தேதி கலவரம் வெடித்தது. அந்த கலவரம் ஒருமாதம் கடந்தும் இன்றும் நீடிக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று அங்கு 4 நாட்கள் தங்கி சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கலவரம் அடங்கவில்லை. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கலவரத்தால் பலியாகி விட்டனர். 30 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டும் அங்கு அமைதி திரும்பவில்லை. நேற்றும் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காங்போகி மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களின் எல்லையில் கோகன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று பாதுகாப்புப் படை வீரர்கள் போல் உடையணிந்த கிளர்ச்சியாளர்கள் குழு வீடுகளுக்குள் புகுந்து சரமாரி சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். கிளர்ச்சியாளர்கள் மெய்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு கிராமத்தில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழைந்தனர். அதற்குள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் மணிப்பூர் காவல்துறை, அசாம் ரைபிள்ஸ், ராணுவத்தின் ஒருங்கிணைந்த குழு ஈடுபட்டது. இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

* சிறப்பு விசாரணைக்குழு அமைத்தது சிபிஐ
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்டு சிபிஐ சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. டிஐஜி தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு மணிப்பூர் கலவரம் தொடர்பாக அமித்ஷா பரிந்துரைத்த 5 குற்றவழக்குகள், ஒரு குற்ற சதி வழக்கை விசாரிக்கும். இந்த வழக்குகைள மாநில அரசிடம் இருந்து பெற்ற சிபிஐ மீண்டும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. சிபிஐ இணை இயக்குனர் கன்சியாம் உபாத்யாய் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்த சிறப்பு விசாரணைக்குழுவுக்கு உதவுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒருமாதம் கடந்தும் கலவரம் நீடிப்பு மணிப்பூரில் 3 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: