‘உங்கள் துறையில் முதலமைச்சர்’328 காவலர்களிடம் புகார் மனுக்கள் பெற்றார் கமிஷனர்: கைக் குழந்தைகளுடன் மனு அளித்த பெண் காவலர்கள்

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவர்களிடம் ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ என்ற திட்டதின் கீழ் 75 பெண் காவலர்கள் உட்பட 328 காவலர்களிடம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரடியாக புகார் மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார். சென்னை மாநகர காவல்துறையில் 22 ஆயிரம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். காவலர்களின் குறைகளை மற்றும் புகார்கள் தொடர்பாக மனுக்கள் பெறும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கு ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் தொடங்கியது.

இதில் சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் 75 பெண் காவலர்கள் உட்பட 460 காவலர்கள் கலந்து கொண்டனர். சில பெண் காவலர்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் மனு அளிக்க வந்தனர். சிறப்பு முகாமை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். மனுக்களை கொண்டு வந்த பெண் காவலர்கள் மற்றும் காவலர்களிடம் கனிவுடன் குறைகளை கேட்டறிந்தார். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், பிறகு பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இடைவிடாமல் 6 மணி நேரம் 300 காவலர்களிடம் கமிஷனர் புகார் மனுக்களை பெற்றார்.

ஊதிய முரண்பாடு, காவலர் குடியிருப்பு ஒதுக்கீடு, பணி மாறுதல் ஆகியவை குறித்தே பெரும்பாலான மனுக்கள் இருந்தன. மீதமுள்ள 168 காவலர்களிடம் இன்று காலை 10.30 மணி முதல் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மனுக்களை பெறுகிறார். இந்த முகாமில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், தலைமையிட இணை கமிஷனர் சாமூண்டீஸ்வரி, துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், நிர்வாக பிரிவு துணை கமிஷனர் சீனிவாசன், ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்தரராஜன், மோட்டர் வாகனப்பிரிவு துணை கமிஷனர் கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

* அம்மாவுக்காக இட மாறுதல் கேட்ட சிறுவன்
சென்னை ஆயுதப்படையில் காவலராக கனிமொழி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது மகனுடன் கமிஷனரிடம் இடமாறுதல் கேட்டு புகார் மனு அளிக்க வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறுவன், ‘எங்க அம்மாவுக்கு இடம் மாறுதல் கொடுப்பீங்களா’ என்று கேட்டான். அதை சற்றும் எதிர்பார்க்காத கமிஷனர் சிரித்தபடி காவலர் கனிமொழியிடம் குழந்தையை தூக்கி வச்சுக்கோம்மா என்று கூறி புகார் மனுவை பெற்றார். பிறகு சம்பந்தப்பட்ட ஆயுதப்படை துணை கமிஷனரிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

* காவலர் குடியிருப்பு கேட்ட திருநங்கை காவலர்
சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலரான திருநங்கை தீபா நேற்று கமிஷனரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ‘‘சொந்த வீடு இல்லாமல் மாதம் ரூ.9 ஆயிரத்திற்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இதனால் கடுமையாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனக்கு காவலர் குடியிருப்பில் வீடு ஒன்று ஒதுக்கி தர வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

The post ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’328 காவலர்களிடம் புகார் மனுக்கள் பெற்றார் கமிஷனர்: கைக் குழந்தைகளுடன் மனு அளித்த பெண் காவலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: