நுகர்வோர் ஆணைய தலைவர் நியமன அறிவிப்பு ரத்து: புதிதாக நியமன நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

மதுரை: நுகர்வோர் ஆணைய தலைவர் நியமன அறிவிப்பை ரத்து செய்த ஐகோர்ட் கிளை, புதியதாக நியமன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், வளையங்குளத்தைச் சேர்ந்த சுந்தரராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்தாண்டு தாக்கல் செய்த மனு: மாநில நுகர்வோர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் ஆணைய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. தற்போது மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

இந்த அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நுகர்வோர் ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. போதிய அனுபவம் மற்றும் தகுதி இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்வது தடுக்கப்பட வேண்டும். இதன்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு முறையானதல்ல என்பதால் ரத்து செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவை பின்பற்றி தமிழ்நாடு அரசு புதிதாக நியமனம் செய்வது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு குறிப்பிட்ட அறிவிப்பிற்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

The post நுகர்வோர் ஆணைய தலைவர் நியமன அறிவிப்பு ரத்து: புதிதாக நியமன நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: