இதை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி தஞ்சாவூரில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்எல்ஏ மகன் திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம், டிடி.வி.தினகரன் ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம் என்றார். இந்த திருமணத்துக்கு சசிகலா வருவார். அப்போது அவரை சந்தித்து பேசலாம் என ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு இருந்தார். ஆனால், சசிகலா வராமல் புறக்கணித்து விட்டார். இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இணைய விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது. அவர் அதிமுகவில் இணைய முன்னாள் அமைச்சர்கள் சிலரை தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு தூதுவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எடப்பாடி திட்டவட்டமாக மறுத்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில்தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகிற 13ம் தேதி (செவ்வாய்) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வருகிற 13ம் தேதி நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியை பலப்படுத்த புதிய உறுப்பினர்களை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட எடப்பாடி திட்டமிட்டுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் கோட்டை என்று கூறப்படும் மதுரையில் எடப்பாடி பழனிசாமி வருகிற ஆகஸ்ட் மாதம் அதிமுக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்திற்கு ஏராளமான தொண்டர்களை அழைத்து வந்து தனது பலத்தை நிரூபிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதுகுறித்து 13ம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
The post பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: சென்னையில் 13ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.