சாலை வளைவில் விபத்து அபாயம்: புதர்களை அகற்ற கோரிக்கை

வருசநாடு: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு முதல் அண்ணாநகர் வரையிலான 8 கிமீ தூர பிரதான சாலையில் அபாயகரமான வளைவுகள் அதிகளவில் உள்ளன. இந்த குறிப்பிட்ட இடைவெளியிலான சாலையில் மட்டும் வாகன விபத்துக்கள் அதிகளவில் நடந்துள்ளன. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்துக்களை தடுக்க சாலையில் ஆங்காங்கு வேகத்தடைகள் மற்றும் சோலார் எச்சரிக்கை விளக்குகளை போலீசார் அமைத்துள்ளனர். போலீசாரின் இந்நடவடிக்கையால் தற்போது விபத்துக்கள் பெரும்பாலும் குறைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடமலைக்குண்டு பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடமலைக்குண்டு-அண்ணாநகர் வரையிலான சாலையின் இருபுறமும் மரங்கள் மற்றும் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் சாலையின் அளவு குறுகி காணப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் லாரி, பஸ் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் விலகி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளை மரக்கிளைகள் மறைத்து வருகின்றன. இதனால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, கடமலைக்குண்டு-அண்ணாநகர் சாலையின் இரண்டு புறமும், சாலையின் வளைவிலும் உள்ள மரங்கள் மற்றும் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலை வளைவில் விபத்து அபாயம்: புதர்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: