வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் டிரைவரே இல்லாமல் சென்ற லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யர்மடத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் திடீரென ஒரு லாரி, திண்டுக்கல் – கரூர் நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் டிரைவரே இல்லாமல் சென்று கொண்டிருந்தது. இதை கண்டு அவ்வழியாக டூவீலர் உள்ளிட்ட மற்ற வாகனங்களில் வந்தவர்கள் பதறியடித்து ஓரமாக ஒதுங்கி நின்றனர். டிரைவர் இல்லாமல் சென்ற லாரி 500 மீட்டர் தூரம் சென்று தானாகவே நடுரோட்டில் நின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து எஸ்எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், லாரியில் ஏறி பார்த்தபோது டிரைவர் தலையில் காயத்துடன் இருப்பதை கண்டனர்.
போலீசார், அவரை மீட்டு விசாரித்ததில் தூத்துக்குடியை சேர்ந்த காளிமுத்து(45) என்பதும், கரூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி காட்டன் பேரல்கள் ஏற்றிக் கொண்டு சென்றதும் தெரிந்தது. மேலும் தூக்க கலக்கத்தில் லாரிக்குள் விழுந்ததில் தலையில் காயம்பட்டதும், லாரி கரூர்- திண்டுக்கல் சாலையில் இருந்து தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசையில் சென்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விட்டு, நடுரோட்டில் நின்ற லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். டிரைவர் இல்லாமல் லாரி எதிர் திசையில் சென்றபாது எந்த வாகனங்களும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
The post வேடசந்தூர் அருகே பரபரப்பு கரூர்- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் டிரைவரே இல்லாமல் ஓடிய லாரி appeared first on Dinakaran.