மதுரை: ஆளுநர் ஒரு கட்சியின் மாநில பிரதிநிதி போல பேசி வருகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரை விமான நிலையம் அருகே வலையங்குளம் கருப்புசாமி கோயில் எதிரே வரும் ஆக.20ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இந்த இடத்தை சீரமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்பு, செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:
காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு என்பது போல், தனது கட்சி வளர வேண்டும் என்ற ஆசையில் அண்ணாமலை ஏதோ பேசி வருகிறார். அதிமுகவை நம்பி யார் ஆற்றில் இறங்கினாலும் அவர்களை கரை சேர்ப்போம்.தமிழ்நாட்டில் ஆளுநர் செயல்பாடு தவறாக உள்ளது. ஆளுநர் ஒரு கட்சியின் மாநில பிரதிநிதி போல தன்னை வெளிக்காட்டிக் கொண்டு, சில பேச்சுகளை பேசி வருகிறார். அவராக பேசுகிறாரா? அல்லது அவருக்கு யாரும் அறிக்கை அனுப்பி பேசச் சொல்கின்றனரா என தெரியவில்லை. அவரின் அரசியல் கருத்துக்களை ஏற்க முடியாது. இதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழ்நாடு ஆளுநர் ஒரு கட்சியின் மாநில பிரதிநிதி போல பேசுகிறார்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி appeared first on Dinakaran.