மறைமலைநகர் ஜிஎஸ்டி சாலையில் சர்வீஸ் சாலையில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்: சீரமைக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு: மறைமலைநகரில் ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே ஒரு மின்கம்பம் அபாயகர நிலையில் சாய்ந்து கிடக்கிறது. அதன் வழியே மின்சாரம் செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிக உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன், அந்த கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலை பகுதியில் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் அருகே, பயன்பாட்டில் இருந்து வரும் ஒரு மின்கம்பம் அபாயகர நிலையில், மற்றொரு மின்கம்ப வயரில் தொற்றிக்கொண்டு கிடக்கிறது. குறிப்பாக மின் பொறியாளர் அலுவலகம் முன்பு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு கீழே சர்வீஸ் சாலை வழியாக இருசக்கர வாகனம், கார் உள்பட பல்வேறு வாகனங்களும், பாதசாரிகளும் நடந்து செல்கின்றனர்.

இந்த சர்வீஸ் சாலை அருகே ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தில் ஏதேனும் வாகனங்கள் உரசினாலோ அல்லது பொதுமக்களில் யாரேனும் அதன் மின்கம்பியை தொட்டாலோ மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயநிலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மறைமலைநகர் ஜிஎஸ்டி சாலையின் சர்வீஸ் சாலையில் மின் வினியோகம் நடைபெறும் நிலையில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post மறைமலைநகர் ஜிஎஸ்டி சாலையில் சர்வீஸ் சாலையில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: