கன்னிவாடி வனச்சரகம் சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க 2.30 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பு

பட்டிவீரன்பட்டி : திண்டுக்கல் மாவட்டத்தில் வனம், வன உயிரினங்களை பாதுகாப்பதற்காக தற்போதைய நிலப்பரப்பில் பசுமை பரப்பின் 22 சதவீதத்தை, 33 சதவீதமாக உயர்த்திட பசுமை தமிழ்நாடு திட்டம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் ஆகிய திட்டங்கள் சார்பாக இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட கன்னிவாடி, கே.சி.பட்டி ஆகிய பகுதிகளில் தேக்குமரம், சில்வர் ஓக், பலா, நாவல், மகாகனி, தோதகத்தி, குமிழ், மலைவேம்பு போன்ற 10 மேற்பட்ட பல வகைகளை சேர்ந்த சுமார் 2.30 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகின்றது.

இம்மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றியும் இயற்கை உரமிட்டும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வனவர்கள் வெற்றிவேல், அறிவழகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதுகுறித்து கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம் கூறியதாவது: செம்மண், வண்டல் மண், கறம்பை மண், இயற்கை உரம் போன்றவற்றை கலந்து அதனை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி அதில் தண்ணீர் விட்டு விதைகளை இட்டோம். அந்த விதைகள் தற்போது மரக்கன்றுகளாக வளர்ந்துள்ளன.

அதிக வெயில் படாமல் இருப்பதற்காக பசுமை குடில்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மரக்கன்றுகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் விவசாயிகளுக்கும், கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளுக்கும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் நகல் போன்றவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினால் மரக்கன்றுகளை பெற்று கொள்ளலாம்.

மேலும் வனப்பகுதிகளில் தரம் குன்றிய காடுகளை பசுமை ஆக்குவதற்காக நபார்டு திட்டத்தின் மூலம் வனப்பகுதிகளில் நடுவதற்காக புங்கன், பூவரசு, கொடுக்காப்புளி, வேம்பு, சரக்கொன்றை, புளி போன்ற மரக்கன்றுகள் தனியாக வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

The post கன்னிவாடி வனச்சரகம் சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க 2.30 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: