ஊட்டி அருகே விவசாய நிலங்களில் மினி பொக்லைன் பயன்பாடு அதிகரிப்பு மண் குவியலால் சகதியாக மாறிய சாலை

ஊட்டி : ஊட்டி காட்டேரி டேம், கோலனிமட்டம் பகுதிகளில் விவசாய நிலங்களில் குப்பட்டா எனப்படும் சிறிய ரக இயந்திரத்தை வைத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அடித்து வரப்படும் மண் சாலையில் குவிந்து சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.ஊட்டி அருகே அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட செல்விப் நகர், கோலனிமட்டம், காட்டேரி டேம் போன்ற கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள மக்கள் ஊட்டி மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல காட்டேரிடேம் – முட்டிநாடு சாலையை பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல, இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைவிக்கும் காய்கறிகளை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவர்களும் இச்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள சரிவான மற்றும் செங்குத்தாக உள்ள விவசாய நிலங்களில் தொடர்ந்து குப்பட்டா ரக மினி பொக்லைன் இயந்திரங்களை இயக்கி நிலம் சரிவுபடுத்துதல் மற்றும் கால்வாய் தோண்டுதல் மேலும் விவசாயி என கூறி அனுமதி வாங்கி மலையை குடைந்து கட்டுமான பணிக்கான தளம் அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இங்குள்ள விளை நிலங்களில் அளவுக்கதிகமான மண் அரிப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் வண்டல் மண் அடித்து வரப்பட்டு கோலனி மட்டம் முதல் முட்டிநாடு வரையுள்ள சாலையில் பல அடிக்கு குவிந்து விடுகின்றன. மேலும் வாகனங்கள் சென்று வரும் போது சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. குறிப்பாக இவ்வழியாக பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி விழும் சம்பவங்களும் நடக்கின்றன. காய்கறிகள் ஏற்றி செல்லும் பிக் அப் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

இதுதவிர சாலையில் நடந்து செல்ல முடியாமல் அணிந்து செல்ல கூடிய ஆடைகளிலும் சகதி பட்டு அல்லலுறும் சூழல் நிலவுகிறது. கிராம மக்களுக்கு அரசு பஸ் வசதி இல்லாத சூழலில் தனியார் மினி பஸ் இயங்கி வந்தது. மோசமான சாலை காரணமாக கடந்த ஓராண்டிற்கு மேலாக மினிபஸ் சேவையும் இயங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு சுமார் 3 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மற்றும் கூலி தொழிலாளர் வசிக்க கூடிய பகுதி என்பதால் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே இப்பகுதியில் விவசாய பயன்பாட்டிற்கு அனுமதி வாங்கி மினி பொக்லைன் மூலம் மலையை குடைந்து சுற்றுச்சூழலுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் குறித்து வருவாய்த்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post ஊட்டி அருகே விவசாய நிலங்களில் மினி பொக்லைன் பயன்பாடு அதிகரிப்பு மண் குவியலால் சகதியாக மாறிய சாலை appeared first on Dinakaran.

Related Stories: