திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அடுத்தவரை எதிர்பாராமல் உழைத்து வாழும் 95 வயது மூதாட்டி

*காண்போரை நெகிழவைக்கும் சம்பவம்

செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அடுத்தவரை எதிர்பாராமல் 95 வயது மூதாட்டி உழைத்து வாழும் நிகழ்வு, காண்போரை நெகிழவைக்கும் விதமாக அமைந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மனைவி செல்லத்தாயி(95). இவருக்கு கணவர், மகன், மகள் மற்றும் உறவினர்கள் உள்ளனர். ஆனாலும் தன் சொந்த உழைப்பில் தான் வாழ வேண்டும், உழைப்பு மட்டுமே எனது லட்சியம் என்று இந்த மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். தற்போது வயது முதிர்ந்த நிலையில் அடுத்தவரை எதிர்பாராமல் 95 வயதிலும் உழைத்து வாழ்கிறார்.

காலையில் 6 மணிக்கு எழுந்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 9.30 மணிக்கு கையில் இருக்கும் பணத்தை வைத்து, பூக்கள் மற்றும் கீரைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். செங்கம் அருகே உள்ள புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மண்டி உள்ளது. இந்த மண்டிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் வேர்க்கடலை உள்ளிட்ட தானியங்கள் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. அங்கு மூட்டைகளில் இருந்து சிதறும் வேர்க்கடலையை தினமும் இந்த மூதாட்டி தள்ளாடியபடி வந்து அவற்றை சேகரிக்கிறார். பின்னர் அதனை அதே இடத்தில் அமர்ந்து சுத்தம் ெசய்து வெளியிடங்களுக்கு கொண்டுசென்று விற்று வருகிறார்.

பூ, கீரைகள் மற்றும் மணிலா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தில் தான், மூதாட்டி தனக்கு தேவையான சாப்பாடு, பொருட்களை வாங்குவாராம். உழைப்பது மட்டுமே குறிக்கோளாக வைத்து, அடுத்தவரை எதிர்பார்க்காமல் சொந்த பணத்தில் தான் வாழ வேண்டும் என்று லட்சியத்தோடு உள்ளாராம். இந்த மூதாட்டிக்கு காது மட்டும் குறைவாகதான் கேட்குமாம். உழைக்க வேண்டிய வயதில், உழைக்காமல் சோம்பேறியாக இருக்கும் பலருக்கு மத்தியில் தனது தள்ளாத வயதிலும் உழைப்பவரே உயர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த பாட்டியின் செயல் அனைவரையும் நெகிழவைக்கிறது.

இதுகுறித்து மூதாட்டியிடம் கேட்டபோது, ‘செங்கம் அருகே உள்ள குக்கிராமத்தில் இருந்து வருகிறேன். எனக்கு மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளனர். ஆனால் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. தினமும் மண்டி அருகே வந்து அங்கு சிதறிக்கிடக்கும் வேர்க்கடலைகளை சேகரிப்பேன். அதனை சுத்தம் செய்து விற்பேன். யாரிடமும் கையேந்துவது பிடிக்காது.

எனக்கு பணம், சாப்பாடு என யார் இலவசமாக கொடுத்தாலும் பெறுவது பிடிக்காது. தினமும் எனக்கு ஓரளவு காசு கிடைக்கிறது. அதைக்கொண்டு வெற்றிலை பாக்கு அல்லது பிடித்த உணவு வாங்கி சாப்பிடுவேன். பேரப்பிள்ளைகளுக்கும் காசு தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.அங்கிருந்த வியாபாரிகள் கூறுகையில், ‘அந்த மூதாட்டி தினமும் வந்து பொறுமையாக வேர்க்கடலைகளை சேகரிப்பார். நாங்கள் எதாவது காசு கொடுத்தால்கூட வாங்க மாட்டார். அவரது சுறுசுறுப்பான உழைப்பை பார்த்து நாங்கள் பலமுறை நெகிழ்ந்துள்ளோம்’ என்றனர்.

தினமும் 2 கி.மீ நடைபயணம்

செங்கம் அருகே குக்கிராமத்தில் இருந்து தினமும் வியாபாரத்திற்காக பொருட்களை வாங்குவதற்கு டவுனுக்கு செல்வதற்கு ஆட்டோ, பஸ், பைக் போன்ற வாகனங்களில் செல்லாமல் தினமும் 2 கி.மீ நடைபயணமாக தான் செல்வார். இப்படி செல்வதால் ஆரோக்கியம் நலமாக இருக்கும் என்று அந்த மூதாட்டி தெரிவிக்கிறார்.

The post திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அடுத்தவரை எதிர்பாராமல் உழைத்து வாழும் 95 வயது மூதாட்டி appeared first on Dinakaran.

Related Stories: