நெல்லை தொழிலதிபரிடம் ₹1.50 கோடி வழிப்பறி விடுதியின் கதவை கார் மூலம் உடைத்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவை போல் மூணாறில் ‘கார் சேஸிங்’

மூணாறு: திருநெல்வேலி தொழிலதிபரிடம் ₹1.50 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்ட 2 இளைஞர்களை மூணாறில் தமிழக போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (40). இவர் நகைகள் வாங்குவதற்காக கடந்த மே 30ம் தேதி, ரூ.1.50 கோடி பணத்துடன் கேரள மாநிலம், நெய்யாற்றங்கரைக்கு காரில் சென்றார். 2 ஊழியர்கள் உடன் சென்றனர். அப்போது அவரை மர்மக் கும்பல் தாக்கி பணத்தை பறித்துச் சென்றது. போலீஸ் விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது கேரள மாநிலம், சாலக்குடியை சேர்ந்த பெபின் சாஜூ (26), எட்வின் தாமஸ் (26) என தெரிந்தது. இருவரும் மூணாறு அருகே சின்னக்கானலில் விடுதியில் தங்கியிருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று தனிப்படை போலீசார் அந்த விடுதியை சுற்றி வளைத்தனர்.

இதையறிந்த பெபின் சாஜூ, எட்வின் தாமஸ் இருவரும், ஜீப்பில் விடுதியின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு தப்பினர். கொச்சி – தனுஷ்கோடி நெடுஞ்சாலை வழியாக மூணாறு செல்ல முயன்றபோது, ​​தேவிகுளம் அருகே சுங்கச்சாவடியில் ஜீப்பை நிறுத்த தமிழக போலீசார் முயற்சித்தனர். ஆனால், சுங்கச்சாவடி மீது ஜீப்பை மோதி விட்டு இருவரும் தப்பினர். இதையடுத்து மூணாறு போலீசார், தங்களது வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி காத்திருந்தனர். அதிவேகமாக வந்த கொள்ளையர்களின் கார் போலீஸ் வாகனத்தை கடக்க முயன்றபோது எதிரே வனத்துறையினர் வாகனம் வந்ததால் பின்னால் வந்த 3 வாகனங்கள் மீது மோதியது.

தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சாலையின் தடுப்புச்சுவரில் மோதி நின்றது. அப்போது தனிப்படை போலீசார், பெபின் சாஜூ, எட்வின் தாமஸை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், ஜீப்பில் மறைத்து வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். ஜீப் மோதி சிவன்மலையைச் சேர்ந்த தினேஷ்குமாரின் ஆட்டோ, முகமது அஷ்ரப் ஓட்டி சென்ற கார், சுற்றுலா வேன் சேதமடைந்தது. கைதான இருவரையும் தனிப்படை போலீசார், தமிழகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிடிபட்ட பெபின் சாஜூ 8 வழக்குகளிலும், எட்வின் தாமஸ் 2 வழக்குகளிலும் சிக்கியவர்கள் என மூணாறு போலீசார் தெரிவித்தனர்.

The post நெல்லை தொழிலதிபரிடம் ₹1.50 கோடி வழிப்பறி விடுதியின் கதவை கார் மூலம் உடைத்து தப்பிய கொள்ளையர்கள்: சினிமாவை போல் மூணாறில் ‘கார் சேஸிங்’ appeared first on Dinakaran.

Related Stories: