கழிவுநீர் தொட்டியின் மூடியை அரை மணி நேரம் அகற்றி திறந்து வைத்தால் அதில் இருக்கும் நச்சு வாயுக்கள் தானாகவே வெளியேறிவிடும் என நினைத்தார்கள். மேலும் பலர் தேங்காய் எண்ணெய் பூசிக் கொண்டால் தொற்றுகளை தடுக்கலாம் என நம்பினார்கள். ஆனால் இவை அனைத்தும் பாதுகாப்பானது இல்லை என அவ்வப்போது கழிவுநீரகற்று வாரியம் சார்பில் பல விழிப்புணர்வுகள் மூலம் பணியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
காலப்போக்கில் கழிவுநீர் தொட்டியில் ஏற்படும் மரணங்கள் ஒரு பேசுபொருளாக மாறியது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனையடுத்து இதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி கழிவுநீர் தொட்டிக்குள் இனி மனிதர்கள் இறங்கக்கூடாது என்றும், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பல்வேறு வழிமுறைகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தியது.
ஏற்கனவே கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யக் கூடாது என்ற உத்தரவு இருந்தாலும், அதனை பலரும் மதிப்பதில்லை. குறிப்பாக வீடுகளில் சிறிய அளவிலான அடைப்பு ஏற்படும்போது அவர்கள் கழிவுநீரகற்று வாரியத்தை தொடர்பு கொள்ளாமல், தன்னிச்சையாக தனியார் ஆட்களை வைத்து கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இது போன்ற உயிரிழப்புக்கள் அதிகளவில் ஏற்பட்டது. எனவே இவை அனைத்தையும் ஆராய்ந்து கழிவுநீரகற்று வாரியம் சார்பில் பல்வேறு திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன.
கழிவுநீரகற்று வாரியம் சார்பில் தற்போது தேசிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 14420 என்ற எண்ணில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அல்லது தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் கழிவுநீரை வெளியேற்ற மேற்கண்ட பொதுவான எண்ணில் புகார் செய்ய வேண்டும். அவ்வாறு புகார் செய்யும்போது புகார் செய்யும் நபருக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதன் பிறகு அவர் எந்த பகுதியில் உள்ளாரோ, அந்தப் பகுதிக்கு அந்த புகார் மாற்றப்பட்டு உடனடியாக கழிவுநீரகற்று வாரியத்தில் இருந்து லாரி மூலம் ஊழியர்கள் சென்று, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வார்கள். சுத்தம் செய்த பின்பு அந்த நீரை பம்பிங் ஸ்டேஷன் எனப்படும் நிலையத்திற்கு எடுத்துவந்து அதனை வெளியேற்றிவிட்டு சம்பந்தப்பட்ட ஊழியரிடம் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும்.
அவர்கள் புகார் செய்த நபரை தொடர்பு கொண்டு ஊழியர்கள் வந்து பிரச்னையை சரி செய்து விட்டார்களா எனக் கேட்டு அவர்கள் அந்த ஓடிபி எண்ணை கூறிய பிறகுதான், அந்த புகார் முழுவதுமாக சரி செய்யப்பட்டது என எடுத்துக் கொள்ளப்படும். தற்போது தொலைபேசி மூலமாகவும் அல்லது நேரிலும் வந்து பொதுமக்கள் தங்களது புகார்களை எழுதி வைக்கின்றனர். இதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்வதாகவும், மேலும் பொதுமக்களுக்கு எளிமையான முறையில் புகார்களை தீர்க்க தற்போது இந்த தேசிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீரை இயந்திரங்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்து கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை பகுதி 6க்கு உட்பட்ட கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், அகரம் 70 அடி சாலையில் நேற்று பகுதி பொறியாளர் வைதேகி, துணைப் பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் லாரி உரிமையாளர்கள் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டது. இதில் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தை எவ்வாறு முறையாக பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும், உரிமம் பெறுவது குறித்தும் அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்களுக்கு கை கவசம், முகக் கவசம், ஹெல்மெட் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் உடைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், கழிவு நீரை எடுத்துவிட்டு அதனை மீண்டும் வந்து பம்பிங் ஸ்டேஷனில் விடும்போது எந்த மாதிரியான நடைமுறைகளை கையாள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதுகுறித்து பகுதி பொறியாளர் வைதேகி கூறுகையில்:
தற்போது எங்களது பகுதியில் உள்ள ஒவ்வொரு பம்பிங் ஸ்டேஷன் பகுதியிலும் உள்ள ஊழியர்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் கழிவு நீரை எவ்வாறு சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று எடுப்பது, அதை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இருந்தாலும், தற்போது அவர்கள் பயன்படுத்தும் உடை உள்ளிட்ட விஷயங்களில் எந்தவித சமரசமும் இன்றி கண்டிப்பாக அரசு வகுத்துள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளோம்.
மேலும் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய எண் குறித்தும், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு புகார்களை பெற்று அதனை தீர்க்க வேண்டும் என்பது குறித்தும் ஊழியர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் கண்டிப்பாக கழிவுநீர் தொட்டியில் ஏற்படும் மரணங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்,’’ என்றார்.
சிறை தண்டனை
மனிதர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கச்செய்து அவர்கள் உயிரிழக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பணியாளர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர்களாக இருந்தால், அதற்கென தனியாக கொடுக்கப்பட்டுள்ள பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். இதன் மூலம் பணியாளரை பணியில் ஈடுபடுத்தும் நபர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க டிஐசிசிஐ அமைப்புடன் இணைந்து சென்னை குடிநீர் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்ட விதிகளுக்கு புறம்பாக கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்வோர் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பான முறையில் கழிவுநீர் தொட்டி அடைப்பை சரிசெய்ய சேவை எண் அறிமுகம்: கழிவுநீரகற்று வாரியம் நடவடிக்கை appeared first on Dinakaran.