1996ம் ஆண்டின் திட்டப்படி கொசஸ்தலை ஆறு பகுதிகளில் மறு ஆய்வு செய்ய வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

திருவொற்றியூர்: கடந்த 1996ம் ஆண்டின் கடலோர மண்டல மேலாண்மை திட்டப்படி கொசஸ்தலை ஆறு பகுதிகளில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் கொசஸ்தலை ஆறு பகுதிகளில் பாதுகாக்கப்பட வேண்டிய பல்வேறு சூழலியல் சார்ந்த இடங்கள் கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைவில் சேர்க்கப்படாமல் இருப்பதாக பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பாக, அந்த பகுதிகளில் உள்ள மணல் திட்டுகள், உவர் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாக்கப்பட வேண்டிய சூழலியல் பகுதிகள் வளர்ச்சி பணிகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் அளித்த புகாரின்படி, 1996ம் ஆண்டின் கடலோர மண்டல மேலாண்மை திட்டப்படி அதிகளவிலான இடங்கள் கொசஸ்தலை ஆறு பகுதியில் இருந்ததாகவும், பின்னர் அடுத்த ஆண்டு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையம் சில பகுதிகளை குறைத்தது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் 1996ம் ஆண்டின் கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தையே எண்ணூரில் பயன்படுத்த அறிவுறுத்தியது.

ஆனால், மீண்டும் அதை எடுத்துக்கொள்வதால் முழு திட்டமும் பயனில்லாமல் போகும் என்றும் புதிதாக வகுக்கப்பட்ட கடலோர மண்டல மேலாண்மை திட்டம் 2011 மற்றும் 2019ம் ஆண்டின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்புகள்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்தியகோபால் அடங்கிய அமர்வு கூறுகையில், தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலை தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பின்பற்றாமல், மனு அளிக்கப்பட்ட பின் காரணங்களை கூறுவது சரியல்ல. அதிகாரிகளின் இந்த போக்கு வருத்தமளிக்கிறது என கூறினர். தொடர்ந்து 1996ம் ஆண்டின் திட்டத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டு வழக்கை ஜூலை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post 1996ம் ஆண்டின் திட்டப்படி கொசஸ்தலை ஆறு பகுதிகளில் மறு ஆய்வு செய்ய வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: