மீஞ்சூர் அருகே சரக்கு லாரி மோதி கர்ப்பிணி பலி: கணவன் கவலைக்கிடம், டிரைவர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அருகே, சரக்கு லாரி மோதி கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக பலியானார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் ஊராட்சியில் நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்தவர் அஜித்(25) இவரது மனைவி ஐஸ்வர்யா(22). இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவர்கள், இரும்பு, பிளாஸ்டிக் போன்ற பொருட்களை சேகரித்து வாழ்ந்து வந்தனர். மூன்று மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யாவுடன் டு வீலரில், நேற்று காலை அஜித் சென்றார். அப்போது பட்டமந்திரி சாலை திருப்பத்தில் சென்றபோது பதிவு எண் இல்லாத சாம்பல் ஏற்றிக்கொண்டு வந்த புதிய டிப்பர் லாரி டு வீலர் மீது பயங்கரமாக மோதியது இதில், மூன்று மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா 200 மீட்டர் தூரம் வரை லாரி சக்கரத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார்.

இதனால், படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அஜித் கால் முறிந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அஜித்தை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து போலீசார் ஐஸ்வர்யா சடலத்தை மீட்டு, அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், லாரி டிரைவர் சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மீஞ்சூர் அருகே சரக்கு லாரி மோதி கர்ப்பிணி பலி: கணவன் கவலைக்கிடம், டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: