ஊட்டி மலை ரயில் தடம் புரண்டது: அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

ஊட்டி: குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில், 50 மீட்டர் தூரத்தில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 3.25 மணியளவில் குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 150 பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையம் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் லெவல் கிராசிங்கிற்கு முன்பே சுமார் 50 மீட்டர் தூரம் சென்ற நிலையில் தடம் புரண்டதால் பெரும் சத்தம் ஏற்பட்டது. இதனை கேட்ட ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி விட்டு பார்த்தார். அப்போது, கடைசி இரு பெட்டிகளின் பற்சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகியது தெரிய வந்தது.

குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே மிக குறைந்த வேகத்தில் மலை ரயில் இயக்கப்படும் நிலையில் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவில்லை. உடனடியாக, குன்னூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள ரயில்வே பணிமனை ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட பெட்டிகளை ஜாக்கிகள் உதவுடன் சரி செய்ய முயன்றனர். கிரேன் உதவுடன் தான் பெட்டியை சீரமைக்க முடியும் என்பதால், அனைத்து பயணிகளுக்கும் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டு மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து குன்னூர் – மேட்டுபாளையம் இடையே மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

* 14 ஆண்டுக்கு பிறகு விபத்து
நீலகிரி மலை ரயில் ஊட்டி – குன்னூர் இடையேயும், ஊட்டி – குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையேயும் இயக்கப்பட்டு வருகிறது. கடைசியாக, கடந்த 2008ல் மலை ரயில் தடம் புரண்டது. அப்போதும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. உடனடியாக, சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர், தற்போது தான் மலை ரயில் தடம் புரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஊட்டி மலை ரயில் தடம் புரண்டது: அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: