சர்வே எண்ணை குறிப்பிட்டு தூர்ந்துபோன கால்வாயை அடையாளம் காண வேண்டும்: திருத்தணி ஜமாபந்தி கூட்டத்தில் மனு

திருத்தணி: திருத்தணியில் நேற்று 3வது நாளாக நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் திருத்தணி நகரம், மடம், தரணி வராகபுரம், முருகம்பட்டு, அகூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு உள்ளிட்ட 67 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அவை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் நகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட கீழ்தேவதானம், முருகப்பாநகர் பகுதி மக்கள் பங்கேற்றனர். அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பாக திருத்தணி ஏரியிலிருந்து மழைக் காலங்களில் மதகு வழியாக வெளியேற்றப்படும் பாசன தண்ணீர், முருகப்பாநகர் வழியாக புறாகோவில் எனும் பகுதிக்குச் சென்று அங்கிருந்து நந்தி ஆற்றில் கலக்கும். தற்போது இந்த ஏரியின் கால்வாய் தூர்ந்துபோய் அடையாளம் காணாமல் போனது. இதனால் மழைக்காலங்களில் சாக்கடைத் தண்ணீரும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகிறது. இதனால் மலேரியா, டெங்கு, உள்ளிட்ட நோய்த் தொற்று ஏற்பட்டு மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இதுசம்பந்தமாக 5வது வார்டு நகராட்சி கவுன்சிலர் குமுதா கணேசன், ஜமாபந்தியில் கோரிக்கை மனுவை ஜமாபந்தி அலுவலரும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியருமான தீபாவிடம் வழங்கினார். இந்த மனுவில், கால்வாய் அடங்கிய நிலப்பகுதியில் சர்வே எண்களை குறிப்பிட்டு உடனடியாக அந்த இடத்தை அளவீடு செய்து, அடையாளம் கண்டு நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அப்போது அவருடன் நகர திமுக துணைச் செயலாளர் கணேசன், முன்னாள் கவுன்சிலர்கள் வீரவால் பழனி, ரவி ஆகியோர் இருந்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஜமாபந்தி அலுவலர் தீபா, உடனடியாக துறைவாரியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் கமல், குறுவட்ட சர்வேயர் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜலட்சுமி, சுதாகர், கௌரி, உமா, டில்லி பாபு, ஜோதி, உதவி வேளாண்மை அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சர்வே எண்ணை குறிப்பிட்டு தூர்ந்துபோன கால்வாயை அடையாளம் காண வேண்டும்: திருத்தணி ஜமாபந்தி கூட்டத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: