ஊத்துக்கோட்டை தாலுகாவில் கறுப்பு கொடியுடன் தாலுகா அலுவலகம் முற்றுகை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகாவில் ஜமாபந்தி 2வது நாளில் வீட்டுமனையை அளவீடு செய்ய வலியுறுத்தி கறுப்பு கொடியுடன் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் 1432ம் பசலிக்கான வருவாய் தீர்வாய கணக்கு எனும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று முன்தினம் 2வது நாளாக நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சேகர் தலைமை தாங்கினார். துணை ஆட்சியர் சுபலட்சுமி, தாசில்தார் வசந்தி, தனி தாசில்தார் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜமாபந்தியின் 2வது நாளான நேற்று முன்தினம் லட்சிவாக்கம், பாலவாக்கம், சிறுனை, சூளைமேனி, கீழ்கரமனூர், செங்கரை, கையடை, தொட்டாரெட்டி குப்பம், ஆத்துப்பாக்கம், வண்ணாங்குப்பம், அரியபாக்கம் எல்லாபுரம், சித்திரியம்பாக்கம், பெரியபாளையம், மூங்கில் பட்டு, பனப்பாக்கம், ராள்ளபாடி ஆகிய 17 கிராமங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம் என 163 மனுக்களை வழங்கினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சிவாக்கம் பகுதியில் கடந்த 40 வருடங்களாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டுமனை இல்லாதவர்கள் 42 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

வீட்டுமனை வழங்கி 5 மாதங்கள் ஆகியும் இதுவரை அளவீடு செய்யவில்லை உடனே அளவீடு செய்து அந்த இடத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்மிடிபூண்டி தொகுதி செயலாளர் ஜீவா தலைமையில் ஒன்றிய செயலாளர் அறிவுச்செல்வம், ஒருங்கிணைப்பாளர் அருள், மா.கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கண்ணன், அருள் ஆகியோர் முன்னிலையில் கருப்பு கொடி ஏந்தி ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜமாபந்தி அலுவலரிடம் மனு கொடுத்து, விரைவில் வீட்டுமனை பட்டா கொடுத்த இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் அளவீடு செய்வதாக உறுதியளித்தனர்.

அளவீடு செய்து கொடுக்கா விட்டால் நாங்களே கொட்டகை போட்டுக்கொள்வோம் என கூறி, அனைவரும் கலைந்து சென்றனர். மற்றொரு கிராமத்தினர் மனு: ஊத்துக்கோட்டையில் நடந்த ஜமாபந்தியில் பெரியபாளையம் அருகே அரியப்பாக்கம் பவானி நகர் மக்கள் கடந்த 13 வருடங்கள் வசித்து வருகிறார்கள் இவர்களுக்கு வீடு, சாலை வசதி, மின்சாரம் என அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. எனவே 13 வருடங்களாக மனு கொடுத்துள்ளோம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எங்களுக்கு இந்த முறையாவது பட்டா வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

The post ஊத்துக்கோட்டை தாலுகாவில் கறுப்பு கொடியுடன் தாலுகா அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: