ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரிகள் இயங்க தடை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிகள் 5 ஆண்டுகள் இயங்க எந்த தடையும் இல்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 6 நகர்புற நலவாழ்வு மையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசால், மருத்துவ இடங்களுக்கு பொது கலந்தாய்வு நடத்தப்படும் என்ற வரைவு கடந்த மாதம் அனுப்பப்பட்டது. உடனடியாக தமிழ்நாடு முதல்வர் ஆலோசனையைப்பெற்று சுகாதாரத்துறை செயலாளர் மூலம் ஒன்றிய அரசிற்கு ஆட்சேபணை கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, ஒன்றிய அரசு பொது கலந்தாய்வு இல்லை எனவும், மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்தது. அதில் சிசிடிவி கேமரா, பயோமெட்ரிக் போன்ற சிறிய அளவிலான குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்து சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருச்சி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவது தொடர்பான நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். உடனடியாக தமிழ்நாடு அதிகாரிகள் குழு டெல்லிக்கு சென்று விளக்கம் அளித்தது.

அதை தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையக்குழு கடந்த இரண்டு நாட்களாக சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும், காணொலிகள் மூலமும் ஆய்வும் செய்தனர். இதன்மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கும் அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்றுக் கொண்டது. அதுமட்டுமின்றி, இக்கல்லூரிகள் அங்கீகாரம் மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பதற்கு தடையில்லை என்று அறிவித்துள்ளனர். திருச்சி மருத்துவக்கல்லூரியைப் பொறுத்தவரை இன்று காணொலி வாயிலாக ஆய்வு நடத்தப்பட உள்ளது. அந்த ஆய்வு முடிந்தவுடன் அதற்கும் தீர்வு கிடைத்திவிடும்.

மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் ரூ.1500 மாதச் சம்பளத்துடன் 2000 ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தனர். தற்போது 878 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களில் இந்த தூய்மை பணியாளர்களை பணிநியமனம் செய்ய அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர் லால் குமாவத் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரிகள் இயங்க தடை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: