கடமையில் இருந்து தவறிய ஆலத்தூர் ஊராட்சி தலைவர் பதவி நீக்கம்: கலெக்டர் தகவல்

திருப்போரூர்: கடமையில் இருந்து தவறியதால், ஆலத்தூர் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். திருப்போரூர் ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி தலைவராக ராமச்சந்திரன், துணை தலைவராக ராஜேஷ் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இருவரும், தாங்கள் பதவிக்கு வரும் முன்பு, கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவு பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய வரவு, செலவு கணக்குகள் முறையாக இல்லை எனக்கூறி, அவற்றை வழங்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, இந்த கணக்குகளை வழங்க முடியாது என்றும், 6 மாத கணக்குகள் மட்டும் வழங்கப்படும் என்று ஒன்றிய நிர்வாகம் தெரிவித்தது. இதன் காரணமாக ஏற்பட்ட மோதலின் விளைவாக அங்கு ஊராட்சி செயலராக பணியாற்றியவர் இடமாற்றம் செய்யப்பட்டு, புதியதாக மற்றொரு ஊராட்சி செயலர் நியமிக்கப்பட்டார். இதனிடையே தற்போது உள்ள நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறி ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். மேலும், பெரும்பான்மை வார்டு உறுப்பினர்கள் தலைவர் மீது நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டருக்கு அனுப்பினர்.

இதன் அடிப்படையில் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள உத்தரவில், ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் ஊராட்சி தலைவருக்கான கடமையில் இருந்து தவறியது நிரூபணமானாதால், அவரை ஊராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக கூறியுள்ளார். இதுகுறித்த பதவி நீக்க உத்தரவு தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டு, திருப்போரூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post கடமையில் இருந்து தவறிய ஆலத்தூர் ஊராட்சி தலைவர் பதவி நீக்கம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: