கொளத்தூர், அண்ணாநகர் தொகுதிகளில் 8 மாண்டிசோரி கல்வி வகுப்பறைகள்: அமைச்சர், மேயர் தொடங்கி வைத்தனர்

சென்னை: கொளத்தூர், அண்ணாநகர் தொகுதிகளில் 8 மாண்டிசோரி கல்வி வகுப்பறைகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். குழந்தைகளுக்கு எளிய முறையில் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி கல்வி பயிற்றுவித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் மாண்டிசோரி கல்வி முறையில் வழங்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சியும் ஒரு வருட காலத்திற்கு நடைபெறும். இந்நிலையில், சென்னை கொளத்தூர் மற்றும் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிகளில் விடியல் மாண்டிசோரி கல்வி அறக்கட்டளை சார்பில் 8 மாண்டிசோரி வகுப்பறைகள் நேற்று திறக்கப்பட்டன. இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் ரிப்பன் வெட்டி இந்த வகுப்பறைகளை திறந்து வைத்தனர்.

பின்னர் இந்த வகுப்புகளுக்காக பயிற்சி முடித்த 35 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் முதல்வர் பார்த்துப் பார்த்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார். அந்த வகையில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மாண்டிசோரி வகுப்பறைகளின் திட்டம் 100% மழலையர்களுக்கு பலன் அளிக்கின்ற ஒரு திட்டமாக உள்ளது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். அந்த குழந்தைகளுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பது தெரியாது. அந்த வகையில் குழந்தைகளுக்கு இதுபோன்ற கல்வியை வழங்குகின்ற பணியை செய்கின்ற அறக்கட்டளைக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகளின் மனதில் ஆழமாக பதியும் ஒரு கல்விமுறையாக இந்த மாண்டிசோரி கல்விமுறை இருக்கும். சென்னை முழுவதும் 30 பள்ளிகளில் இந்த வகுப்பறைகளைத் தொடங்கி தொடர்ந்து இதற்காக உழைத்து வருகின்ற மாண்டிசோரி அறக்கட்டளைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அண்ணாநகர் எம்எல்ஏ மோகன், விடியல் மாண்டிசோரி கல்வி அறக்கட்டளை இயக்குனர் ஸ்ருதி கார்த்திக், திமுக பகுதிச் செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், திருவிக நகர் மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கொளத்தூர், அண்ணாநகர் தொகுதிகளில் 8 மாண்டிசோரி கல்வி வகுப்பறைகள்: அமைச்சர், மேயர் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: