குடியிருப்பு அருகே குப்பை கொட்டுவதை கண்டித்து ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியில் போதிய அரசு புறம்போக்கு நிலங்கள் இல்லாதநிலை உள்ளது. இதன் காரணமாக வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் இருந்த சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் போன்றவற்றை சேகரித்து தரம் பிரித்து உரம் தயாரிக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில், கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. சமீபத்தில் கேளம்பாக்கம் புறவழிச்சாலையில் உள்ள தரிசு நிலத்தில் இப்பணியை செய்தபோது, அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கேளம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய சாத்தங்குப்பம் பகுதியில் சிவசங்கர் பாபா ஆசிரம ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 7 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

இந்த இடத்தை மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் பார்வையிட்டு இதற்கான ஒப்புதலை அளித்தனர். இந்நிலையில், இந்த இடத்தை ஒட்டி வசிக்கும் ரெயின்போ காலனி, பழனி கார்டன், அனுமன் காலனி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு குடியிருப்பையொட்டி குப்பை சேகரிப்பு மையம், திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகம் அமைத்தால், தங்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வரும் குப்பை அள்ளும் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், அனைவரும் ஊர்வலமாக சென்று கேளம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் முன்பு வந்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் நேரில் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஏற்கனவே, திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகம் செயல்பட்ட இடத்திலும் சிலரை தூண்டி விட்டு போராட்டம் நடத்தி தடுத்து விட்டதாகவும், தற்போது இந்த இடத்திலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தால், போதிய அரசு புறம்போக்கு நிலம் இல்லாதநிலையில் ஊராட்சியில் அகற்றப்படும் குப்பைகளை எங்கு சேகரித்து தரம் பிரித்து உரமாக மாற்ற முடியும் என்று ஊராட்சி தலைவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கேள்வி எழுப்பினர்.

மேலும், நமது ஊரில் சேகரிக்கப்படும் குப்பைகளை வேறு ஊரில் கொட்ட இயலாத நிலை உள்ளதாகவும், கூடுவாஞ்சேரி, வேங்கடமங்கலம் போன்ற இடங்களுக்கு கொண்டு சென்றால் ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினமும், நேர விரயமும் ஏற்படுவதாகவும் ஊராட்சி தலைவர் தெரிவித்தார். இருப்பினும் மாவட்ட கலெக்டரை சந்தித்து, இதுகுறித்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை பொறுமை காக்குமாறும் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post குடியிருப்பு அருகே குப்பை கொட்டுவதை கண்டித்து ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: