தொடர் போராட்ட அறிவிப்பு டிட்டோஜாக் ஆசிரியர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை

சென்னை: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவுடன் (டிட்டோஜாக்) பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் டிபிஐ வளாகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்)வின் மாநில உயர்மட்டக் குழுவின் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்கள் செ.முத்துசாமி, வின்சென்ட்பால்ராஜ், ச.மயில், இரா.தாஸ், சி.சேகர், முத்துராமசாமி, சண்முகநாதன், தியோடர்ராபின்சன், காமராஜ், ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதனால் அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரி வருகின்றனர். அதன்படி, அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்றுகட்ட போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 12ம் தேதி வட்டாரத் தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, 26ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், ஜூலை 14ம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தி முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தல் என அறிவிக்கப்பட்டுள்ளன. டிட்டோஜாக்கின் இந்த போராட்ட அறிவிப்பை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ெதாடக்க கல்வித்துறை இயக்குநர்கள் உடனடியாக டிட்டோஜாக் உயர்மட்டக் குழுவினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் சென்னை கல்வி வளாகத்தில் இன்று பேச்சு வார்த்தை நடக்கிறது.

The post தொடர் போராட்ட அறிவிப்பு டிட்டோஜாக் ஆசிரியர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: