காஞ்சிபுரம் மகளிர் திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு, பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலிப்பணியிடமாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு கீழ்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

6 மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும். விண்ணப்பத்தினை, இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை 15.6.2023க்குள் அனுப்பி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* நாளை ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) காலை 10 மணிக்கு ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.காஞ்சிபுரம் வட்டத்தில் கிளார், உத்திரமேரூர் வட்டத்தில் பென்னலூர், வாலாஜாபாத் வட்டத்தில் ஏகனாம்பேட்டை, பெரும்புதூர் வட்டத்தில் வல்லக்கோட்டை, குன்றத்தூர் வட்டத்தில் எழிச்சூர் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.

இந்த கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். அப்போது, மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும், புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் மகளிர் திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: