நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் தொடர் சரிவு: தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா…

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை தீர்க்கப்படுகிறது. அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். கடந்த மூன்று ஆண்டுகளாக அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த ஆண்டு வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 52 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 61 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வைகை அணை முழு கொள்ளளவை எட்டும் போது மொத்தமாக 6 ஆயிரத்து 91 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது வைகை அணையில் 2 ஆயிரத்து 307 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. வைகை அணையில் தற்போது 40 சதவீத தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது.‌

இதன் காரணமாக இந்த ஆண்டு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது. தற்போது தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. வைகை அணைக்கு இக்கட்டான காலகட்டத்தில் கை கொடுக்கும் பெரியாறு அணையும் தற்போது போதுமான நீர் இருப்பு இல்லாமல் உள்ளது. வைகை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தால் தற்போது அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றுள்ளது. வைகை அணையில் இருப்பில் உள்ள தண்ணீரை மதுரை, சேடப்பட்டி-ஆண்டிபட்டி பெரியகுளம், தேனி பகுதிகளின் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை கை கொடுக்கும் பட்சத்தில் முதல் போகத்திற்காக இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாமல் வைகை அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவது 5 மாவட்ட விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

The post நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் தொடர் சரிவு: தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா… appeared first on Dinakaran.

Related Stories: