சென்னையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 424 சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சாஸ்திரி நகர் காவல் எல்லையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 424 சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளை தொடங்கி வைத்தார். சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில் காவல்துறையின் மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் சென்னை நகரம் முழுவதும் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் விளைவாக சென்னை பெருநகரில் இதுவரை சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல் துறையினர், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சுமார் 62,351 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், அடையாறு காவல் மாவட்டத்தில் முக்கிய சாலைகள், சாலைகளின் இணைப்புகள் மற்றும் இதர தெருக்களில் சென்னை பெருநகர காவல்துறை, தனியர் நிறுவனங்கள், பொதுமக்கள், ஒத்துழைப்போடு புதிதாக 424 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கேமராக்கள் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு, சிசிடிவி பதிவு காட்சிகளை கண்காணிக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய வளாகங்களில் கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று (08.06.2023) காலை, J-7 வேளச்சேரி காவல் நிலைய எல்லையில் 150 சிசிடிவி கேமராக்கள், J-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லையில் 150 சிசிடிவி கேமராக்கள் மற்றும் J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லையில் 124 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் 424 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

மேலும், இக்கேமராக்களின் காட்சிகளை கண்காணிக்கும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டறைகளையும், காவல் ஆணையாளர் திறந்து வைத்தார். J-7 வேளச்சேரி காவல் நிலைய வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்றையில், மேற்படி 150 சிசிடிவி கேமராக்கள் மற்றும் காவல் நிலைய நான்கு சக்கர, இருசக்கர ரோந்து வாகனங்கள் GPS கருவியுடன் இணைக்கப்பட்டு, இக்கட்டுப்பாட்டறையில், கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அவசர காலத்தில், குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து வாகன உதவி தேவைப்படும் நேரத்தில் கட்டுப்பாட்டறையில் இருந்து கண்காணித்து அருகில் இருக்கும் ரோந்து வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லையிலுள்ள 124 சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டறை, திருவான்மியூர் ஜெயந்தி சிக்னல் அருகில் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படும்.

J-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கும் கட்டுப்பாட்டறையில் கேமராக்கள் ஒருங்கிணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இதில் பெசன்ட்நகர் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள 20 கேமராக்கள் பெசன்ட்நகர் கடற்கரை காவல் உதவி மையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்திகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, தெற்கு மண்டல காவல் இணை ஆணையாளர், M.R.சிபிசக்ரவர்த்தி, அடையாறு காவல் துணை ஆணையாளர் P.மகேந்திரன், சிசிடிவி கேமராக்கள் நிறுவ உதவிய குடியிருப்போர் நலச்சங்கத்தினர், தனியார் நிறுவன உரிமையாளர்கள், நிர்வாகிகள், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 424 சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் appeared first on Dinakaran.

Related Stories: