300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணி 2வது நாளாக தீவிரம்

செஹோர்: மத்தியபிரதேசத்தின் செஹோர் மாவட்டம் அருகே முங்கோலி கிராமத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, அப்பகுதியில் உள்ள வயலில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில் 20 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை, மேலும் 50 அடி சரிந்ததால் மீட்பு பணி மிக தீவிரமாக நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து செஹோர் மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் திவாரி கூறுகையில், கிட்டத்தட்ட 24 மணிநேரமாக மீட்பு பணி மும்முரமாக நடந்து வருவதாகவும், மண் அள்ளும் இயந்திரங்களின் உதவியுடன் பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு என்பதால் மீட்பு பணியில் சற்று கால அவகாசம் எடுத்து வருகிறது. அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதால், பூமிக்கு அடியில் 26 முதல் 27 அடி வரை செல்ல முடிந்தது. மீட்பு குழுவினர், மற்றொரு முறையை பின்பற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கடினமான பாறையின் காரணமாக மீட்பு பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

இதற்கிடையில் இந்த சம்பவத்தை கேள்விபட்டதும், சுற்றுவட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். குழந்தை பத்திரமாக மீட்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவ்ஹான் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆழ்துளை கிணற்றில் இருந்த குழந்தையை வெளியேற்றும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையின் குழுவும் ஈடுபட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், குழந்தைக்கு போதுமான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும் கடினமான பாறைகள் நிறைந்துள்ளதால் துளையிடுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். 2வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

The post 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் பணி 2வது நாளாக தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: