ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக்கல்லூரி 5 ஆண்டு இயங்குவதற்கு தடை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி 5 ஆண்டுகளுக்கு இயங்குவதற்கு தடை இல்லை என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள நகர்புற நல்வாழ்வு மையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநில அரசே பொது கவுன்சிலிங் நடத்திகொள்ளலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.

அதில் பயோ மெட்ரிக், சிசிடிவி இல்லை என சிறிய சிறிய குறைப்பாடுகள் உள்ளது என ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, தருமபுரி மருத்துவக்கல்லூரி, திருச்சி மருத்துவகல்லூரி அகிய கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். அதில் ஏன் இந்த மருத்துவமனையின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யகூடாது என நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். உடனடியாக முதல்வருடன் ஆலோசனை செய்து துறையின் செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் தலைமையில் டெல்லிக்கு ஒரு குழு அனுப்பப்பட்டது. அனைத்து மருத்துவகல்லூரிகளிலும் பயோ மெட்ரிக், சிசிடிவி உள்ளது.

கோடைக்காலம் என்பதால் 10 சதவிதம் அல்லது 15 சதவிதம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் அவர்கள் விடுப்பை பயன்படுத்தி விடுமுறை எடுத்துகொள்வார்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் நடக்கும். இதற்காக ஒரு கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கூடாது என்று எல்லாம் சொல்லப்பட்டது. மேலும் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, தருமபுரி மருத்துவக்கல்லூரியில் பயோ மெட்ரிக், சிசிடிவி பொருத்தப்பட்டு அது தொடர்பான கடிதத்தை கல்லூரி முதல்வர் பாலாஜி அந்த குழுவிடம் கொடுத்தார். அதன் அடிப்படையில் தேசிய மருத்துவ ஆணையம் மீண்டும் ஆய்வு செய்து அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யகூடாது என நோட்டீசை திரும்பப்பெற்றது.

மேலும் 5 ஆண்டுகளுக்கு கல்லூரிகள் இயங்குவதற்கு தடை இல்லை என்று அறிவித்து இருக்கிறார்கள், இதற்கான எழுத்துபூர்வமான கடிதம் ஓரிரு நாட்களில் வந்து சேரும். திருச்சி மருத்துவகல்லூரி மட்டும் நாளை காணொலி மூலம் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். தேசிய மருத்துவ ஆணையம் இந்தியா முழுவது 140 கல்லூரிகளை ஆய்வு செய்தார்கள், அதில் சிறிய சிறிய தவறுகள் இருந்தால் அதை குறிப்பிடுவார்கள் அதை செய் செய்வது வழக்கமான ஒன்று தான். கல்லூரிகள் மூடப்படுகிறது என சில அரசியல் கட்சி தலைவர்கள் பிம்பத்தை உருவாக்கினார்கள் ஆனால் தற்போது தேசிய மருத்துவ ஆணையம் கல்லூரி நடத்த தடை இல்லை என அறிவித்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக்கல்லூரி 5 ஆண்டு இயங்குவதற்கு தடை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: