வாடகை நிலத்தில் நாட்டுமாடு வளர்ப்பு

சென்னை செங்குன்றத்தில் வசிக்கும் மேகலா – சண்முகம் தம்பதியினர் ஐடி துறையில் பணிபுரிந்துவருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் நாட்டு மாட்டுப்பண்ணைத் தொழிலிலும் ஈடுபடுகிறார்கள். மாடு வளர்ப்பவர்கள் பெரும்பாலும் பாலையோ, தயிரையோதான் விற்பனை செய்வார்கள். இவர்களோ பால் முதல் கோமியம் வரை அனைத்தையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்து கலக்குகிறார்கள். 50 சென்ட் நிலத்தை வாடகை அடிப்படையில் எடுத்து இந்த பண்ணையை நடத்தி வரும் தம்பதியினரை சந்தித்தோம். பண்ணையைபற்றியும், தங்களைப்பற்றியும் பேச ஆரம்பித்தார்கள். கடந்த 8 ஆண்டுகளாக இந்த பண்ணையை நடத்திவருகிறோம். தற்போது 40க்கும் அதிகமான பாரம்பரிய மாடுகளை வளர்க்கிறோம். இதில் 30 காங்கேயம், 6 காங்ரெஜ், 4 கிர் இன மாடுகள் உள்ளன. மாடு வளர்ப்புக்கு, சிறந்த நாட்டினத்தைச் சேர்ந்த மாடுகளை தேர்வு செய்ய வேண்டும். நாட்டுப் பசும்பாலுக்கு, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் பால் விற்பனை செய்வதில் சில நுணுக்கங்களை கையாள வேண்டும். அப்போதுதான், மாடு வளர்ப்பு லாபகரமானதாக இருக்கும். பாலை மதிப்புக்கூட்டி தயிர், மோர், வெண்ணெய், நெய் என விற்பனை செய்தால் கூடுதல் லாபம் பெறலாம்.

பொதுவாகவே இனப்பெருக்கம் செய்த பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து தோராயமாக கன்று ஈனும் காலத்தை தெரிந்துகொள்ள வேண்டும். சினை மாடுகளை அதிக தொலைவு நடக்க வைக்கக்கூடாது. ஏழாவது மாதம் முடிந்தவுடன் சினைப்பசுவை தனியாக பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்து பராமரிக்க வேண்டும். கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்கு தேவையான சத்துகளையும் பசுமாட்டுக்கு வழங்க வேண்டும். இதற்காக மருத்துவரிடம் கேட்டு சரியான அளவில் தீவனத்தை வழங்குகிறோம். ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். தொடர்ந்து
பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே ஆன்டிபயாடிக் மருந்தை டியூப் மூலம் செலுத்துகிறோம். இதனால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

பால் கொடுக்கும் மாடுகளுக்கு தீவனப் பராமரிப்பு மிகவும் அவசியம். தீவனம் கொடுப்பதில் அலட்சியமாக இருந்தால் குறைமாத கன்றுக்குட்டியை ஈனுவதோடு, 20 கிலோவுக்கு குறைவாக உள்ள கன்றினை ஈன்றுவிடும். அதுமட்டுமல்லாமல் நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையிலேயே தங்கிவிடும். மேலும் கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். இதனால் பால் உற்பத்தி குறைய வாய்ப்புகள் உருவாகும். இதைத் தடுக்க சரிவிகித சத்துகள் கொண்ட தீவனங்களை கொடுத்து வருகிறோம். அதாவது ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளித்து வருகிறோம். 8வது மாத சினையில் தினமும் 1 முதல் ஒன்றரை கிலோ கலப்புத்தீவனம் கொடுக்கிறோம். இவ்வாறு பராமரித்து வந்தால் ஆரோக்கியமான கன்றுக் குட்டியையும், நல்ல பால்வளத்தையும் பெறலாம். நாட்டு மாடுகளில் காங்கேயம் பசு ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் பால் கொடுக்கும். உலகளவில் தமிழகத்தின் ஊத்துக்குளி வெண்ணெய் புகழ் பெற்றதற்கு, அப்பகுதியில் கிடைக்கும் காங்கேயம் பசுக்களின் பாலே காரணம். பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர், நெய்யுடன் பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றை கலந்தே பஞ்சகவ்யம், பூச்சி விரட்டி தயாரிக்கப்படுகிறது. அதனால் சென்னை, திருவள்ளூரை சுற்றியுள்ள மாடித்தோட்ட விவசாயிகள் எங்களிடம் பஞ்சகவ்யத்தை வாங்கி செல்கிறார்கள். பிலோனா முறையில் தயார் செய்த நெய்யினையும் மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள்.

மாடுகளுக்கு நோய் வராமல் பாதுகாக்க தினமும் ஒருமுறை தொழுவத்தை சுத்தம் செய்கிறோம். கோமாரிநோய் பாதிப்பு ஏற்பட்டவுடனேயே உணவு எடுத்துகொள்வதை நிறுத்திவிடுவதால், மாடுகள் பலவீனமாகிவிடும். அதுமட்டுமில்லாம நோய் எதிர்ப்புச்சக்தி வேகமாகக் குறையும். இதன் காரணமாக, அருகேயுள்ள பல வகை பாக்டீரியாக்களின் தாக்குதல் அதிகமாகி, மாடுகள் உயிரிழக்கவும் செய்யலாம். கோமாரி நோயால் பாதிப்புக்குள்ளான மாடுகளுக்கு உடனடியாக ஆன்டிபயாடிக் மருந்துகள் தருவதற்காகக் கால்நடை மருத்துவர்களை வரவழைக்கிறோம். நோய் தாக்காமல் இருக்க உரிய நேரத்தில் தடுப்பூசி போடுகிறோம். அதாவது நோய் வராமல் தடுக்க கன்றுகளுக்கு 4வது மாதத்தில் தடுப்பூசி போடுகிறோம். நாளுக்கு நாள் தீவனச்செலவு, கறவை மாடு பராமரிப்புச் செலவு அதிகரித்துக் கொண்டேபோகிறது. ஆனால் பாலுக்கு அதிகளவில் விலை கிடைக்காமல் வருமானம் குறைவாகத்தான் கிடைத்தது. இதனால் பாலை மட்டுமே விற்பனை செய்யும்போது போதிய வருமானம் கிடைக்காது என்பதை புரிந்துகொண்டேன். பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம் என முடிவுசெய்தேன். இப்போது நல்ல வருமானம் கிடைக்கிறது. பிலோனா முறையில் தயார் செய்த நெய்யினை மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். மாதத்துக்கு பராமரிப்புச்செலவு, தீவனச் செலவு போக ரூ.55 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது.

கோமாரி நோய்க்கான மருத்துவம்

நோய் தாக்கிய மாடுகளின் வாயில் உள்ள புண்களுக்கு கிளிசரின் அல்லது போரிக் அமில பவுடரை தேங்காய் எண்ணெயில் குழைத்து தினமும் 4 முறை தடவ வேண்டும். கால் புண்ணுக்கு தண்ணீரில் பொட்டாசியம் பர்மாங்கனேட்டு கலந்து கழுவிய பின் “லோரெக்சான்” களிம்பு தடவலாம். நாட்டு வைத்தியம் என்று பார்க்கும் போது பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 10 கிராம், துளசி, குப்பை மேனி, மருதாணி மற்றும் வேப்பிலை தலா 10 சேர்த்து அரைத்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து 10 நிமிடம் காய்ச்ச வேண்டும். ஆறிய பின் இந்த எண்ணெயை தினமும் இரு முறை கால் புண்களில் தடவினால் விரைவில் குணமாகும்.அதேபோல வாய்ப் புண்களுக்கு சீரகம், வெந்தயம், மிளகு, மஞ்சள் தலா 20 கிராம், பூண்டு 4 பல் சேர்த்து ஊற வைத்து அரைக்க வேண்டும். இதனுடன் வெல்லம் 100 கிராம், துருவிய தேங்காய் 1 சேர்த்து 4 அல்லது 5 பாகங்களாகப் பிரித்து உண்ணக் கொடுக்கலாம். 5 நாட்கள் கொடுக்க வேண்டும். வாயின் உள்ளே நெய் அல்லது வெண்ணெய் தடவ வேண்டும்.

தாது உப்புக்கலவையின் நன்மை

கறவை மாடுகளுக்கு தாதுஉப்புக் கலவையானது உடல் வளர்ச்சி, பால் உற்பத்தியை கொடுக்கிறது. மேலும் பாலில் கொழுப்பு இல்லாத திடப் பொருட்களின் அளவு அதிகரிக்கிறது. கன்றுகள் வேகமாக வளர்ச்சியடைந்து பருவத்துக்கு வருவதற்கு ஏதுவாகிறது. அத்துடன் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நோய் தாக்குதல் குறைவதுடன், பொருளாதார இழப்பும் தவிர்க்கப்படுகிறது. சினைப்பருவமின்மை, கரு தங்காமை, கருச்சிதைவு, நஞ்சுக்கொடி தங்கிவிடுதல் போன்ற இனப்பெருக்க கோளாறுகள் ஏற்படுவது பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது. கால்நடைகளின் உற்பத்தித் திறன், இனப்பெருக்க திறனை மேம்படுத்த தாது உப்பு கலவையை கண்டிப்பாக அனைத்து கால்நடைகளுக்கும் அளிக்க வேண்டும்.

The post வாடகை நிலத்தில் நாட்டுமாடு வளர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: