அன்றைய காலத்தில் கிளித்தட்டு, எட்டுக்கோடு, கயிறு இழுத்தல், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, கோலிக்குண்டு, கீரிபாரி, அம்பெறிதல், வண்டிச்சவாரி, வீடு கட்டி விளையாடுதல், குலை குலையாய் முந்திரிக்காய், உப்பு மூட்டை, புளியடி, பச்சைக் குதிரை, கிட்டு புள். தட்டாங்கள், ஓடிப்பிடித்தல், கண்ணாமூச்சி, சில்லுக்கோடு, ஊஞ்சல், காற்றாடி, சாக்கு ஓட்டம், பட்டம் விடுதல், கண்பொத்தி விளையாட்டு என்று மொத்தம் 70 வகையான விளையாட்டுகளை விளையாடினர். இந்த விளையாட்டுகள் அனைத்தும், உடலை வலுப்படுத்துவது, அறிவை பெருக்குவது, விடா முயற்சி, நோய் எதிர்ப்பு சக்தி, பிரச்சனைகளை சமாளிப்பது, தீர்வு காண்பது என ஒவ்வொன்றும் ஒன்றை குறிக்கோளாக கொண்டிருக்கும். இதனால் குழந்தைகள் இயல்பாகவே அவற்றை கற்றுக் கொண்டன. பல்லாங்குழி விளையாட்டு மூலம், விரலுக்கு பயிற்சியும் கணக்கு பயிற்சியும் பெற முடிந்தது. கோலி இலக்கை நோக்கி கைவிரல்களை கொண்டு அடிப்பதால், குறிப்பார்க்கும் தன்மையும், விரல்கள் நல்ல வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரித்தது. பம்பரம் மற்றவர்களை விட மிக வேகமாக செய்யும் ஆற்றலை தந்தது. ஆடுபுலி ஆட்டம் சிறந்த மதிநுட்ப ஆட்டமாகும். தாயம் சிறந்த யுத்த தந்திரத்தை கற்றுத்தந்தது. இதுவே தற்போது சதுரங்கமாக ஆடப்படுகிறது. பாண்டியாட்டம் எனப்படும் நொண்டியாட்டம் ஒற்றைக்காலில் துள்ளிக்குதித்து உடல் எடையை சீராக வைக்க உதவியது.
கண்ணாமூச்சி மிகச்சிறந்த தேடுதலை ஏற்படுத்தக் கூடியது. இப்படி ஒவ்வொரு விளையாட்டும் ஒவ்வொரு வகையில் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் இந்த விளையாட்டுகளை யாரும் விளையாட தற்போது ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு காரணம் செல்போன், வீடியோ கேம், என்று குழந்தைகள் வீட்டையே உலகமாக சுருக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியபோது, வசிக்கும் தெருவை தாண்டி மற்ற தெருக்களில் இருக்கும் சிறுவர் சிறுமியர்களையும் சேர்த்து விளையாடினர். இதனால் நட்பு, மொழி, கலாச்சாரம் என்று பலவற்றை கற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. ஆனால் பழங்கால, பாரம்பரிய விளையாட்டுக்களை சுவர்களில் வரைந்து நினைவூட்டும் முயற்சி பல இடங்களில் தொடங்கியிருக்கிறது. எனவே வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நம்முடைய குழந்தைகளை தெருக்களில் விளையாட அனுமதிக்க வேண்டும். அக்கம் பக்க குழந்தைகளுடன் பழக அனுமதிக்க வேண்டும். நமக்கு தெரிந்த பாரம்பரிய விளையாட்டுகளை அவர்களுக்கு சொல்லி கொடுத்து அதன் நன்மைகளை விளக்கினால் அவர்களின் உடல், மன நலனை பாதுகாப்போம்!
The post மறந்தே போயிருச்சு! உடல், மன நலனை வளர்த்த பாரம்பரிய விளையாட்டு: சுவரில் வரைந்து நினைவூட்டும் ஓவியர்கள் appeared first on Dinakaran.