தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் மறுசீரமைக்கப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

சென்னை : தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் மறுசீரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பழங்குடியினர் நலனைக் காக்க தமிழ்நாட்டில் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பகுதிகள் இல்லாத போதிலும் பழங்குடியினர்களின் நலன் மற்றும் அவர்களது முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்க தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் (Tamil Nadu Tribes Advisory Council) அரசாணை (நிலை) எண். 3042, உள்துறை, நாள் 04.09.1961-இல் ஏற்படுத்தப்பட்டது. இம்மன்றம் 1978, 1980, 1998, 2007, 2009 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் மறு சீரமைக்கப்பட்டது.

பழங்குடியின மக்களின் முன்னேற்றமே சமூக நீதியாக அமையும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதால், பழங்குடியின பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்கு அமைத்தல் மற்றும் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் பழங்குடியினரின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய அலுவல் சாரா உறுப்பினர்களில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இம்மன்றம் விரைவில் மறுசீரமைக்கப்பட்டு 2021- ஆம் ஆண்டு இவ்வரசால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் செயல்படுவதை போன்று சிறப்பாக செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் மறுசீரமைக்கப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் appeared first on Dinakaran.

Related Stories: