எப்போது பரிகாரங்கள் பலிக்கும்?

இன்று ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் பரிகாரம் என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. எல்லோரும் பரிகாரத்தைத்தான் பெரிதாக நம்புகிறார்கள். தேடுகிறார்கள்.

‘‘இந்த கோயிலுக்குப் போ, பலிக்கும்; இந்த பூஜை செய் பலிக்கும்’’ என்று சொன் னால் உடனே அங்கே படையெடுக்கிறார்கள். சிலர் “இப்படிப் பரிகாரங்கள் எல்லாம் எதுவும் சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை என்றும் சொல்கிறார்கள். பரிகாரம் சொல்லப்படாமலா இத்தனைக் கோயில்களும் வழிபாடுகளும் இருக்கின்றன என்பது ஒரு சாரார் கருத்து.

நோய் என்று இருந்தால் அதற்கு மருந்து என்று ஒன்று இல்லாமல் இருக்குமா? அந்த மருந்துதான் பரிகாரம். ஆனால் இங்கேயும் சில விஷயங்கள் உண்டு. சில நோய்களைக் கட்டுப்படுத்தலாமே தவிர முற்றிலும் தீராது. சில நோய்கள் மருந்து சாப்பிட்டவுடன் போய்விடும்.

சில நோய்களுக்கு அதிக காலம். மருந்து சாப்பிட வேண்டியிருக்கும். ஏன் சாகும் வரை கூட சில நோய்களுக்கு மருந்து சாப்பிட வேண்டியிருக்கும். சில நோய்களுக்கு மருத்துவமே இல்லை. அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அப்படித்தான் பரிகாரங்கள் விஷயத்திலும் நடக்கிறது.

இதைப் புரிந்துகொள்ளாமல் பரிகாரம் பலிப்பதில்லை என்று சொல்லக்கூடாது. பரிகாரங்கள் பலிப்பதற்குக் கீழ்கண்ட விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் அந்த விஷயம் பரிகாரத்திற்கு உட்பட்டதா என்று பார்க்க வேண்டும். பரிகாரம் எத்தனை காலம் செய்ய வேண்டி யிருக்கும் என்று பார்க்க வேண்டும். சரியான பரிகாரமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நான்காவதாக பரிகாரத்தைப் பற்றிய அறிவும் தெளிவும் வேண்டும். சரி, பரிகாரம் என்பது என்ன, எப்படிச் செய்தால் பலிக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இந்தக் கதை உங்களுக்கு உதவும்.

ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். மாலை நேரம் வந்து விட்டது. வழி தவறினார். எங்கும் இருள். தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதைப் போல இருந்தது. ஏதேனும் கொடிய மிருகமாகத்தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கிச் செலுத்தினான்.

அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து “ஐயோ… அம்மா” என்ற குரல் கேட்டது. இதென்ன மனிதனின் சப்தம் கேட்கிறதே… என்று அஞ்சிப் பதறிய மன்னன் மரத்தை நோக்கி விரைந்தான். அங்கு பதினாறு வயதுச் சிறுவன் ஒருவன் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.

“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே”என்று பதைபதைத்தான் மன்னன். அதற்குள் வீரர்கள் வந்து விட்டனர். அரசன், உடனே காவலாளிகளைக் கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான். வீரர்கள் ஒரு வயதான தம்பதியினரை அழைத்து வந்தனர்.

“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப் பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள். மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி,

“என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனைக் கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு. போதிய வெளிச்சம் இல்லாததால் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்…மன்னித்து விடுங்கள்”.ஆனால் அவர்கள் சமாதானமாகவில்லை. மன்னரின் முகத்தைப் பார்ப்பதும், விம்மி விம்மி அழுவதுமாக இருந்தனர்.மன்னன் என்பதால் கடுமையாக பேசவும் முடியவில்லை.

இதைக் கவனித்த மன்னன் அடுத்த நொடி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான். இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான். ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான். மற்றொரு தட்டில் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி வைத்தான். “மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன்.

நான் தண்டிக்கப் படவேண்டியவன். சந்தேகமில்லை. உங்களிடமே தீர்ப்பைக் கூறும் வேலையை விட்டு விடுகிறேன். இரண்டு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகளும் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன. அவற்றை எடுத்துக்கொண்டு என்னை மன்னியுங்கள். அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள். தவறு செய்த எனக்கு மரண தண்டனை சரிதான். மன்னன் செய்தாலும் தவறு தவறு தானே.”

தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து, மகனை இழந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன். காவலர்களும் மந்திரிப் பிரதானிகளும் திகைத்தனர்.” இதென்ன மன்னன் பயித்தியமா? இப்படி விபரீதமான முடிவுக்குப் போய்விட்டானே. அரசாங்கத்தை யார் நடத்துவது…? மக்களுக்கும் அரசிக்கும் என்ன பதில் சொல்வது?” என்று நினைத்தனர். விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? என்று மயங்கினர்.
விறகுவெட்டி சொன்னான்.….

“ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?

‘‘ஆம்’’

‘‘நான் இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ எடுத்துக்கொள்ளப் போவதில்லை என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்.?

“ஐய்யய்யோ…அப்படியானால் மன்னனை பழி தீர்க்கப்போகிறானா? இது என்ன விபரீதம்?

“நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன்பொருளையும் விரும்பவில்லை. இரண்டாலும் என் பிள்ளை வரப்போவது இல்லை. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்துகிறார். தண்டனை ஏற்கத் தயாராக இருக்கிறார். அவர் அறியாமல் செய்தது, என் மகனின் விதியோடும், எங்கள் விதியோடும் இணைந்து விட்டது. அவர் நினைத்தால் என்னையும் தண்டிக்கும் அதிகாரம் இருக்கிறது.

ஆனால் அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்யத் துணிந்துவிட்டார். அது ஒன்றே போதும். மன்னரைத் தண்டிப்பதால் இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகி விடும். மன்னர் தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது… எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.

இந்தக் கதை ஒரு உருவகக்கதை.பிராயச்சித்தத்தை விளக்கும் கதை. அந்த மன்னன் தான் நாம். நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை. அந்த விறகுவெட்டிதான் இறைவன். மன்னன் செய்ததுபோல் தப்பிக்க நினைக்காமல் மனம் வருந்தி தண்டனை ஏற்கத் தயாரானால் அவன் மன்னிப்பான்.
பரிகாரம் செய்தால் போச்சு என்று பணத்தாலோ, யாகங்களாலோ, ஆண்டவனுக்கு வெள்ளி தங்க ஆபரணங்களை செலுத்தினாலோ, ஆண்டவனை ஒரு நொடி கூட திரும்பிப் பார்க்க வைக்க முடியாது. பாவங்களைக் கரைப்பதற்கு ஒரே வழி கண்ணீர்தான். நம்மால் பிறர் அழுதால் பாவம். நாம் அழுதால் அது தீரும்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post எப்போது பரிகாரங்கள் பலிக்கும்? appeared first on Dinakaran.

Related Stories: