90 ஆண்டுகளை தொடும் தமிழ்நாட்டின் கம்பீரம்: டெல்டாவிற்கு நீர் வார்க்கும் பொக்கிஷம் மேட்டூர் அணை.! இந்த ஆண்டு பாசனத்திற்கு 12ம் தேதி முதல்வர் திறக்கிறார்

சேலம்: ‘‘ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்னும் மேட்டூர் அணை,’’ இது தமிழ் நிலத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களின் 16 லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு நீர் வார்க்கும் ஆதாரம். 1934ல் கட்டி முடிக்கப்பட்ட போது, ஆசியாவிலேயே நீளமான அணை என்ற பெருமிதம். இன்றளவும் அணை கட்டுவோருக்கு உலகத்தின் முன்மாதியாக திகழும் கவுரவம்,’’ இப்படி அடுக்கடுக்கான சிறப்புகளால் மிரள வைக்கும் பொக்கிஷமாக திகழ்கிறது இந்த அணை. இத்தகைய பெருமைக்குரிய மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 4நாட்களில் காவிரி நீர், பொங்கி பிரவாகமெடுத்து டெல்டா செழிப்பதற்கு பாய்ந்தோடி செல்கிறது. இதையொட்டி மேட்டூர் அணை உருவான நினைவுகளில் மூழ்கி வருகின்றனர் வரலாற்று ஆர்வலர்கள். கரிகாலன் கட்டிய கல்லணையை தாண்டி பெருக்கெடுத்தது காவிரி. இதனை கட்டுப்படுத்தி மேட்டூரில் அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகளுக்கு 1823ம் ஆண்டிலேயே அச்சாரமிட்டவர் ஆர்தர்காட்டன் என்ற ஆங்கிலேய பொறியாளர். ஆனாலும் மைசூர் சமஸ்தானத்தின் பிடிவாதத்தால் தொடர்ந்து பல ஆண்டுகளாக அதற்கான சாத்தியக்கூறுகள் கேள்விக்குறியானது. இப்படிப்பட்ட சூழலில் 1923ல் தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டனர்.

புயல் காலங்களில் கட்டுக்கடங்காமல் வரும் காவிரி நீரால் எங்கள் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடாக ஆண்டுதோறும் ₹30 லட்சம் வழங்க வேண்டும் என்றனர். இதற்காக மைசூர் சமஸ்தானத்திற்கு மாவட்ட கலெக்டர் மூலம் “நோட்டீஸ்” அனுப்பினர். ஆண்டுதோறும் ₹30 லட்சம் இழப்பீடு கொடுப்பதைக் காட்டிலும், மேட்டூரில் அணை கட்டுவதற்கு சம்மதிப்பதே சிறந்தது என்று திருவாங்கூர் சமஸ்தான திவான், சி.பி.ராமசாமி அய்யர் மைசூர் சமஸ்தானத்திடம் எடுத்துக்கூறினார். அதோடு அணை கட்டுவதற்கான சம்மதக் கடிதமும் பெற்று, அதை கலெக்டருக்கு அனுப்பி வைத்தார். இதன்விளைவாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. 1925 ஜூலை 20ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு பொறியாளரான கர்னல் வில்லியம் மார்க் எல்லீஸ், நிர்வாகப் பொறியாளரான வெங்கட்ராமையர், முதன்மைத் தலைமைப் பொறியாளரான முல்லிங்க்ஸ் ஆகியோர் தலைமையில் 24 பொறியாளர்கள் அடங்கிய குழு அணை கட்டும் பணியைத் தொடங்கியது.

ஒன்பது ஆண்டு காலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உருவாக்கப்பட்ட அணையின் கட்டுமானப் பணிகள் 1934ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி, நிறைவு பெற்றது. அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜான் பெடரிக் ஸ்டான்லி 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பாசனத்திற்கு நீரைத் திறந்துவைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, ‘ஸ்டான்லி நீர்த்தேக்கம்’ என்றனர் என்று நினைவுகளை பகிர்ந்துள்ளனர் வரலாற்று ஆர்வலர்கள். இது குறித்து தொல்லியல் சார்ந்த வரலாற்று ஆர்வலர்கள் மேலும் கூறியதாவது: இன்று கம்பீரமாக காட்சியளிக்கும் மேட்டூர் அணை கட்டுமானத்தில் காவிரிபுரம், கோவிந்தபாடி, நாயம்பாடி, நவப்பட்டி, சாம்பள்ளி, சோளப்பாடி என்று ஏராளமான குக்கிராமங்கள் காணாமல் போய்விட்டது. திப்பு சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பகுதிகளில் இருந்த நிலங்கள், வளங்கள், அங்கே வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை, பயன்படுத்தப்படும் மொழிகள் பற்றியதொரு ஆய்வுக்காக 1801ல் இப்பகுதிக்கு நடைபயணமாக வந்தார் டாக்டர் பிரான்சிஸ் புக்கானன். அவர், காவிரிபுரத்தில் 6,500 பேர் வாழ்ந்ததாக, தனது பயண விவரங்களைக் கொண்ட நூலில் குறிப்பிட்டுள்ளார். மைசூர் நாட்டுக்கும், கொங்கு நாட்டுக்கும் இடையில் முக்கியமான வணிக நகராக காவிரிபுரம் இருந்தது.

காவிரி ஆற்றின் வலது கரையில் சோழப்பாடி என்று ஒரு ஊர் இருந்தது. இந்த ஊரில், ஆங்கில அரசின் கோட்டையும், ராணுவமும், அந்தப் பகுதியில் விளையும் தானியங்களைக் கொண்டுவந்து வியாபாரம் செய்யும் வணிகச் சந்தையும் புகழ் பெற்றிருந்தது. நேசம், பாசம், நட்புறவோடு நல்லிணக்கத்தின் அடையாளமாக மக்கள் வாழ்ந்தனர் என்று அந்த பயண நூலில் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக மாநிலம், செங்கப்பாடி, ஆலாம்பாடி, ஆத்தூர், கவுதள்ளி, ஓடக்காப்பாளையம், மாடால்லி, நல்லூர், தோமையார்பாளையம், ஜல்லிபாளையம், ஊகியம் போன்ற தமிழர்கள் வசிக்கும் கிராமங்கள் எல்லாமே மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, தண்ணீரில் மூழ்கிய பகுதியிலிருந்து கண்ணீருடன் இடம் பெயர்ந்தவர்கள் குடியமர்ந்த பகுதிகள்தான். அணையின் நீர்மட்டம் குறையும் போதெல்லாம் தென்படும் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தியும், இரட்டை கிறிஸ்தவ கோபுரங்களும், ஏர்கோல்பட்டி வீரபத்திரசாமியும், தண்ணீருக்காக கண்ணீரோடு வாழ்விடங்களை தாரைவார்த்துக் கொடுத்த எளிய மக்களின் ஒப்பற்ற தியாகத்திற்கு அழியாச்சான்றுகள். இவ்வாறு வரலாற்று ஆய்வாளர்கள் கூறினர்.

The post 90 ஆண்டுகளை தொடும் தமிழ்நாட்டின் கம்பீரம்: டெல்டாவிற்கு நீர் வார்க்கும் பொக்கிஷம் மேட்டூர் அணை.! இந்த ஆண்டு பாசனத்திற்கு 12ம் தேதி முதல்வர் திறக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: