ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட பாஜக ஆதரவாளர் கைது..!!

குமரி: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், கடந்த 2ம் தேதி ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இதில், 288 பேர் உயிரிழந்த நிலையில், 1,175 பேர் காயமடைந்தனர். இதனிடையே, 40 பயணிகளின் உடல்களில் வெளிப்புற காயம் இல்லை எனவும் ரயில் பெட்டிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து குறித்து வெறுப்புணர்வை தூண்டிய பாஜக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பருத்திவிளை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார் பாஜகவின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக இஸ்லாமிய ஊழியர் ஒருவரை விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து குறித்து சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்தை பதிவிட்ட செந்தில்குமார் மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே ஒடிசா ரயில் விபத்துடன் இஸ்லாமியர்களை தொடர்புபடுத்தி பதிவிட்ட வலதுசாரி ஆதரவாளர்கள் மீது ஒடிசா போலீஸ் வழக்குப்பதிவு செய்திருந்தது. மேலும் ரயில் விபத்து தொடர்பாக சாதி, மத ரீதியாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரித்து இருந்தது. தற்போது, சமூக வலைத்தளத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்தை பதிவிட்ட பாஜக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்ட பாஜக ஆதரவாளர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: