பொதுவாக, மது, கஞ்சா போன்ற போதைக்கு அடிமையானவர்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் போதை மாத்திரைக்கு அடிமையானவர்களை உடன் இருக்கும் பெற்றோர்களால்கூட அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்கின்றனர், மருத்துவ நிபுணர்கள். குறிப்பாக மது குடித்தாலோ அல்லது கஞ்சா பயன்படுத்தினாலோ அவர்களின் நடவடிக்கையை வைத்தும் மதுவாடையை கொண்டும் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் போதை மாத்திரையில் எந்த மாற்றத்தையும் அறிய முடியாது. பெற்றோர்கள் தங்களது குழந்தை போதை மாத்திரையோ அல்லது ஏதோ ஒரு போதை பொருளை பயன்படுத்துவதை கண்டுபிடிப்பதற்குள் அந்த குழந்தை முழு அடிமையாகி போதை இருந்தால்தான் உயிர் வாழவே முடியும் என்ற நிலையை எட்டி விடுகின்றனர் என திடுக்கிட வைக்கின்றனர் மன நல மருத்துவர்கள். இதில் ஆண், பெண் என்ற பாலின வேறுபாடு ஏதும் இல்லாமல் பெண் குழந்தைகளும் குறிப்பாக ‘டீன்ஏஜ்’ பெண்கள் போதை மாத்திரைக்கு அடிமையாகி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி பவித்ரா கூறியதாவது: ஆரம்ப காலத்தில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடிமையான இளைஞர்கள் இன்றைக்கு போதை மாத்திரைக்கு அடிமையாகி வருகின்றனர். போதை மாத்திரை என்று தனியாக எதுவும் இல்லை. மாத்திரைகளை போதை தரக்கூடியதாக மாற்றி அதை உடலில் ஊசி மூலம் செலுத்தி கொள்கின்றனர். குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் நரம்புகளில் ஏற்றிக்கொள்கின்றனர். ஊசி ஏற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே போதை ஏறி விடுகிறது. இந்த மாத்திரைகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே வாங்கி பயன்படுத்துகின்றனர். சில மருந்து விற்பனை பிரதிநிதிகளும், மருந்து கடை உரிமையாளர்களும் சட்டத்திற்கு புறம்பான வகையில் வலி நிவாரணி மருந்துகளை டாக்டர்களின் பரிந்துரை ஏதும் இல்லாமல் விற்பனை செய்கின்றனர். ஈரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரண 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையின் விலை வெறும் ரூ.32 மட்டுமே. ஆனால் இதே அட்டை வெளியில் ரூ.3500க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுவரை போதை மாத்திரை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் தான் அதிகம். இதில் இளம்பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதை கும்பல் பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து செயல்பட்டு வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. காலை, மாலை என இருவேளையும் போதை ஊசிகளை போட்டுக்கொள்கின்றனர்.இந்த போதைக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீண்டு வருவது என்பது மிகவும் கடினமாக உள்ளது.
போதைத்தன்மை உடலில் குறைந்து, மீண்டும் போதை ஊசி போட்டுக்கொள்ளவில்லையெனில் அவர்களால் இயல்பான சூழலில் இருக்க முடிவதில்லை. சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், பெரும்பாலானோர் கொரோனா தொற்று காலத்தில்தான் இதற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது இவர்கள் ஏற்கனவே மது மற்றும் கஞ்சா போதைக்கும் அடிமையாக இருந்த சூழலில் கொரோனா தொற்று காலத்தில் இந்த இரண்டுமே கிடைக்காத நிலையில், மருந்து கடைகள் மற்றும் ஆன்லைன் மூலம் வலி நிவாரணி போன்ற மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.இதேபோல தவறான நண்பர்களின் மூலமும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மூலம் மட்டுமே இதுபோன்ற சூழலில் உள்ளவர்களை மீட்டெடுக்க முடியும். குழந்தைகளின் வழக்கமான நடவடிக்கைகளை பெற்றோர்கள் நுட்பமாக கவனிக்க வேண்டும். ஏதாவது சிறு மாறுதல் ஏற்பட்டாலும் தனிக்கவனம் செலுத்துவது அவசியம். இதேபோல பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் நடவடிக்கைகளில் சிறு மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதோடு தனியாக அழைத்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும். ஆரோக்கியமான ஒரு சமூகத்தை கட்டமைக்க, அனைவரும் இணைந்தால் மட்டுமே முடியும். இவ்வாறு டிஎஸ்பி பவித்ரா கூறினார்.
The post வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தி போதைக்கு அடிமையாகும் இளம் சமூகம்: மீட்டெடுக்க என்ன செய்யலாம்? appeared first on Dinakaran.