திண்டுக்கல்லில் 8 மாதங்களாக கடும்வீழ்ச்சி: பன்னீர் திராட்சை விலை உயர்ந்து ரூ.70க்கு விற்பனை.! விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 8 மாதங்களாக கடும்வீழ்ச்சியில் இருந்த பன்னீர் திராட்சி விலை உயர்ந்து ரூ.70க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் என்று சொன்னவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது பூட்டும், பிரியாணியும் தான். ஆனால் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரப் பகுதியில் விளையக்கூடிய பன்னீர் திராட்சையும் இங்கு பேமஸான ஒன்று தான். இந்த பன்னீர் திராட்சையானது சிறுமலை அடிவாரப் பகுதிகளான வெள்ளோடு, கோம்பை, ஜாதி கவுண்டன்பட்டி, நரசிங்கபுரம், பெருமாள்கோவில்பட்டி, சின்னாளப்பட்டி, அம்மையநாயக்கனூர் என சுமார் 400 ஏக்கருக்கு மேலாக பன்னீர் திராட்சை விவசாயத்தை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு விளையக்கூடிய பன்னீர் திராட்சையானது சிறுமலையில் உள்ள இயற்கை காற்று, அங்கு வரக்கூடிய நீர், மண் வளம் ஆகியவைகளினால் இந்த திராட்சைக்கு தோல் கடின தன்மையாக உள்ளதாலும் பன்னீரின் சுவை கொண்டு மருத்துவ குணங்கள் உள்ளடக்கியதாக உள்ளது.

மேலும் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாத தன்மை உடையதால் தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் இந்த பன்னீர் திராட்சை விரும்பி வாங்கி உட்கொண்டு வருகின்றனர். புரட்டாசி மாதம் ஆரம்பித்து சித்திரை வரை 8 மாத காலங்களாக பனி மற்றும் மழை காரணங்களால் இப்பகுதியில் விளைவிக்கப்பட்டு இருந்த பன்னீர் திராட்சைகள் விற்பனையின்றி கொடியிலேயே அழுகி கீழே கொட்டும் அவல நிலை இருந்தது. மேலும் சென்ற வாரம் வரை ரூ.20க்கு கூட விற்பனை ஆகாமல் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இந்நிலையில் தற்போது சுட்டரிக்கும் வெயிலின் தாக்கத்தால் பன்னீர் திராட்சைகளின் தேவைகள் அதிகமாக உள்ளது. இதன் காரணத்தால் 20 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ பன்னீர் திராட்சை தற்பொழுது தோட்டத்திலேயே ஒரு கிலோ 70 ரூபாய் வரை விற்பனையாகி வருவதால் பன்னீர் திராட்சை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க பன்னீர் திராட்சைகளின் விலை மேலும் விலை ஏற்றம் அடைய வாய்ப்பு உள்ளதாக கூறினர்.

The post திண்டுக்கல்லில் 8 மாதங்களாக கடும்வீழ்ச்சி: பன்னீர் திராட்சை விலை உயர்ந்து ரூ.70க்கு விற்பனை.! விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: