சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகாரில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்டத்துக்கு உட்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தடையில்லை என்று தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க ரூ.300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ.290 கோடி மதிப்பிலும் 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. இதில் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அப்போதைய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, இதுசம்பந்தமாக ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோரும், அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோரும் ஆஜராகினர். அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் வாதிடும்போது, இந்த புகார் தொடர்பாக 2019ம் ஆண்டே ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை முடிவடைந்து விட்டது.

இந்த விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என்று உயர் நீதிமன்றம், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டுள்ளது. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசு தான். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதில் இருந்து மாநில அரசை தடை செய்ய முடியாது என்பதால், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

அப்போது, ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எங்கள் நிறுவனங்களை பிளாக் லிஸ்டில் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எந்த நோட்டீசும் அனுப்பாமல், விளக்கம் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், இது வெறும் விளக்க நோட்டீஸ்தான். அதற்கு கூட பதில் தரவில்லை என்று கூறினார். இதை கேட்ட நீதிபதிகள், பிளாக் லிஸ்டில் சேர்க்கப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் கேட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

* டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அப்போதைய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

The post சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகாரில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: