ரூ.300 கோடி இழந்த ஆத்திரத்தில் சிறைபிடிப்பு ஆருத்ரா கிளை உதவியாளர் தம்பியை மரத்தில் கட்டி வைத்த முதலீட்டாளர்கள்: நெமிலி அருகே விடியவிடிய பரபரப்பு

நெமிலி: நெமிலி அருகே ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து, சுமார் ரூ.300 கோடி வரை இழந்த முதலீட்டாளர்கள் கிளை உதவியாளரின் தம்பியை சிறைபிடித்து மரத்தில் கட்டி வைத்து விடியவிடிய போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ‘ஆருத்ரா கோல்டு கம்பெனி’ என்ற பெயரில் பல்வேறு கிளைகள் தொடங்கப்பட்டது. இங்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.25 ஆயிரம் வட்டி கிடைக்கும் என ஆசைகாட்டி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளனர்.

இதுதொடர்பான புகார்களின்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழ்நாடு முழுவதும் ஆருத்ரா கோல்டு கம்பெனி நிறுவனங்களில் சோதனை செய்து ‘சீல்’ வைத்தனர். மேலும் நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி சயனபுரம் பகுதியை சேர்ந்த ஆருத்ரா நிறுவன மேலாளர் சதீஷ்(33) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது உதவியாளரான யோகானந்தம் தலைமறைவாக உள்ளார். இவர்களிடம் அப்பகுதி மக்கள் பலர் ரூ.300 கோடி வரை முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு யோகானந்தம் வீட்டின் முன் திடீரென திரண்டனர். அங்கிருந்த யோகானந்தத்தின் தம்பி சதீஷை(24) சிறைபிடித்து மரத்தில் கட்டி வைத்து தங்கள் பணத்தை திருப்பித்தர வேண்டும். இல்லையென்றால் உனது அண்ணன் யோகானந்தம் நேரில் வந்து பதில் சொல்லவேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரக்கோணம் ஏஎஸ்பி கிரிஷ் யாதவ் மற்றும் நெமிலி போலீசார் வந்து பாதிக்கப்பட்ட மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள், யோகானந்தம் வந்தால் மட்டுமே சதீஷை விடுவிப்போம் என்றனர். போலீசார் விடியவிடிய பேச்சுவார்த்தை நடத்தி நேற்று காலை 6 மணிக்கு சதீஷை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post ரூ.300 கோடி இழந்த ஆத்திரத்தில் சிறைபிடிப்பு ஆருத்ரா கிளை உதவியாளர் தம்பியை மரத்தில் கட்டி வைத்த முதலீட்டாளர்கள்: நெமிலி அருகே விடியவிடிய பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: