தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிங்க: அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: ‘‘தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மாயமான குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 10 ஆண்டுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் எஸ்பிக்கள் மேற்பார்வையில், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் உதவியுடன் சிறப்பு சோதனைகளை மேற்கொள்ள, மாநகரங்களில் உள்ள கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காணாமல் போன குழந்தைகளை விரைவாக கண்டறிந்து, அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்க அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களின் ஒத்துழைப்பு இந்த சிறப்பு செயல்பாட்டை வெற்றியடைய செய்யும். எனவே மீட்கப்பட வேண்டிய குழந்தைகளின் விவரங்கள் 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். அதன் ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையை வரும் 12ம் தேதிக்கு அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த பணிகளை நிறைவேற்றும் காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பார்களுக்கு தகுந்த வெகுமதி வழங்கப்படும்.

The post தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிங்க: அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: