அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: உயர்கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை

சேலம்: தமிழகத்தில் அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறன் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் தமிழகம் முழுவதும் 140க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் உள்ள இளங்கலை பாடப்பிரிவுகளின் இடங்களுக்கு நடப்பாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது. மாணவர்களின் மதிப்பெண் கட்ஆப் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தகுந்தவாறு, பொதுப்பிரிவினர், எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனிடையே ஒருசில கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில் ₹2 ஆயிரம் வரையிலும், முன்னாள் மாணவர் சங்கம் என்ற பெயரில் ₹1,000 வரையிலும் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளிடம், அவர்களுக்கு அரசின் மூலம் விலக்களிக்கப்பட்ட கட்டணத்தையும் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு பரவி வருகிறது.

இதுதொடர்பாக அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்ட துறையின் அரசாணையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து உத்தரவிடப்பட்டது. இதேபோல், கடந்த 2010ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணையில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தனிக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்து ஆணைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் நடப்பாண்டு பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. எனவே, அனைத்து அலுவலர்களும், மேற்குறிப்பிடப்பட்ட அரசாணைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்களுக்கு, சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: உயர்கல்வித்துறை செயலாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: