மண்டபம்: மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற உள்ள நிலையில், ஜூன் 14ம் தேதி விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். மேலும், தடைகாலத்தை நாட்டுப்படகுகளுக்கு அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிபட்டினத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். மண்டபம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பாலசுப்ரமணியன், ஜாகீர்உசேன், பாலன், சோழியக்குடி கோபி, கோட்டைப்பட்டினம் மீனவர் சங்கத்தலைவர் அசன் முகைதீன், ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்கத் தலைவர் உத்திரபதி, தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்கத்தலைவர் ராஜமாணிக்கம், செயலர் வடுகநாதன், செல்வக்கிளி, முத்து, இப்ராஹிம், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், ‘விசைப்படகுகளுக்கான நடப்பாண்டு மீன்பிடி தடை காலம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. நடப்பாண்டில் 61வது நாள் தடைக்காலம் ஜூன் 14 (புதன்) நள்ளிரவில் நீங்குவதால், அரை நாள் (6 மணி நேரம்) மட்டுமே கடலுக்குச் சென்று மீன்பிடித்து கரை திரும்ப உள்ளோம். இதனால், ஜூன் 14ம் தேதி காலை கடலுக்கு சென்று மறுநாள் கரை திரும்புவது என அனைத்து மீனவர்களின் சார்பில் தீர்மானிக்கப்படுகிறது. இதற்காக அரசிடம் அனுமதி பெற உள்ளோம். மானிய விலை டீசலை (விற்பனை வரி நீக்கம் செய்யாமல்) 1,800 லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும். பழுதான படகுகள் தொழிலுக்கு மீண்டும் செல்லும்போது, முதல் மாதம் பிடிக்கப்படாமல் உள்ள டீசலையும், சேர்த்து பிடித்துக் கொள்ளும் கடந்த கால நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்.
தடைக்காலம் முடிந்து பிடித்து வரும் இறால் உள்ளிட்ட மீன் ரகங்களை உரிய விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஏற்றுமதியாளர்களை அரசு அழைத்து, அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நாட்டுப்படகு மீனவர்களுக்கும் தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும். இல்லையேல் தடைக்காலத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற உள்ள நிலையில் ஜூன் 14ம் தேதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு: தடைக்காலத்தை நாட்டுப்படகுகளுக்கும் அமல்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.