பிஎஸ்என்எல் செல்போன் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

டெல்லி: 4ஜி, 5ஜி சேவையை பிஎஸ்என்எல் செல்போன் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இனிமேல் பிஎஸ்என்எல் செல்போன் நிறுவனம் 4ஜி, 5ஜி சேவையை வழங்குவதற்கான நடவடிக்கையை தொடங்க ஏதுவாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் 4ஜி, 5ஜி சேவைகளை முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் வழங்கும் வகையில் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இன்று காலை பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் ரூ.89,047 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சகம் அறிவித்துள்ளது. 4ஜி, 5ஜி சேவைகள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எல்லைப்புற மாநிலங்களுக்கும் கிடைக்கும் வகையிலும், ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும் அறிவிக்கப்பட்ட நிதி செலவிடப்படும் என ஒன்றிய அமைச்சகம் அறிவித்துள்ளது.

4ஜி சேவை கட்டமைப்பு ஏற்கனவே பல பகுதிகளில் இருந்தபோதிலும் முழுமையான கவரேஜை பிஎஸ்என்எல் நிறுவனத்தினால் வழங்க முடியாத காரணத்தினால் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை நாடியதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

The post பிஎஸ்என்எல் செல்போன் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: