மானிய குறைப்பால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை உயர்ந்தது

பெட்ரோல், டீசல் விலை உச்சம் அடைந்த பிறகு, பலரும் மாற்று எரிபொருளாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். பெட்ரோல், டீசல் தேவைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காகவே பேம் திட்டத்தின் கீழ் அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பேம் 2 திட்டம், 2019 ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வந்தது. பின்னர், வரவேற்பை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டு வந்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும்.

ஒரு கிலோவாட் அவருக்கு ரூ.10,000 வீதம் மானியம் வழங்கப்பட்டது. ஆனால், வாகனத்தின் ஷோரூம் விலையில் அதிகபட்சம் 20 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மானியம் கிலோவாட் அவருக்கு ரூ.15,000 எனவும், அதிகபட்ச மானியம் ஷோரூம் விலையில் 40 சதவீதம் எனவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், எலக்ட்ரிக் டூவீலர்களுக்கான மானியம் கிலோவாட் அவருக்கு ரூ.15,000 என்பதில் இருந்து மீண்டும் ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்படுவதாகவும், அதிகபட்ச மானியமானது ஷோரூம் விலையில் 15 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் எலக்ட்ரிக் வாகனங்கள் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப, ஓலா நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளது. ஓலா நிறுவன இணையதளத்தில் உள்ள தகவலின்படி, ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் விலை இனி ரூ.1.3 லட்சமாக இருக்கும். இது முன்பு ரூ.1.15 லட்சமாக இருந்தது. இதுபோல், ஓலா எஸ்1 புரோ ஷோரூம் விலை சுமார் ரூ.15,000 உயர்ந்து ரூ.1.4 லட்சமாகியுள்ளது. இது போல் ஏதர் 450 எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.1.45 லட்சம் எனவும் 450 எக்ஸ் புரோ ரூ.1.65 லட்சம் எனவும் உயர்த்தப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

The post மானிய குறைப்பால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை உயர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: