பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை குறித்து பரிசீலனை: திமுக எம்.பி வில்சனுக்கு ஒன்றிய அமைச்சர் கடிதம்

சென்னை: பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்து மதத்தைப் பின்பற்றும் பழங்குடியினப் பெண்கள் சொத்துகளில் சமமான பங்குகளைப் பெறுவதற்கு ஏதுவாக, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் நன்மை பயக்கும் விதிகளைப் பயன்படுத்துமாறு ஒன்றிய அமைச்சர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அண்மையில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுமட்டுமின்றி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த திமுக எம்.பி வில்சன் இதே கோரிக்கையை எடுத்துரைத்து கடிதம் வழங்கினார். கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அக்கடிதத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு குடியரசுத் தலைவர் அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், திமுக எம்.பி வில்சனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘பழங்குடியின பெண்கள் சொத்தில் சம உரிமை பெற பழங்குடியினர் விவகாரத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை,

சமூக நீதித் துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகியவற்றின் அமைச்சர்களோடு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும், இதில் அரசியலமைப்பின் சட்டத்தின் படி மாநிலப்பட்டியலில் வருவதால் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசனை தேவைப்படுகிறது. அந்தவகையில், இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப்படும்’ என்று கூறியுள்ளார். இதை மகத்தான வெற்றியாக கருதுவதாகவும், பழங்குடியின மகளிருக்கு சம உரிமைகளை வழங்கும் வகையில், அனைத்து தரப்பினராலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் திமுக எம்.பி.வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

The post பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை குறித்து பரிசீலனை: திமுக எம்.பி வில்சனுக்கு ஒன்றிய அமைச்சர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: