பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: சென்னை விமானநிலையத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து ஏப்ரல் மாதத்தைவிட கடந்த மே மாதத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை 1,48,031 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த மாதம் 303 விமானங்கள் கூடுதலாக இயக்கப்பட்டு உள்ளன என விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை விமானநிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான முனையங்களில் கடந்த சில மாதங்களாக விமான பயணிகளின் வருகையும் புறப்பாடும் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்துக்கு முன்னதாக சென்னை விமான நிலையம் எப்படி பரபரப்பாக செயல்பட்டதோ, அதேபோல் தற்போது சென்னை விமானநிலையம் பரபரப்பாக மாறி வருகிறது.

முன்னதாக, சென்னை விமானநிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் 11,405 விமானங்களில், 17,42,607 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், உள்நாட்டு முனையத்தில் இருந்து 8,751 விமானங்களில் 12,97,049 பேரும், சர்வதேச முனையத்தில் இருந்து 2,654 விமானங்களில் 4,45,558 பேரும் விமானங்களில் பயணம் செய்துள்ளனர் எனக் குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக, கடந்த மே மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்தன. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அந்தமான், கொச்சி, பெங்களூர், மதுரை, கோவை உள்ளிட்ட விமானங்களில் உள்நாட்டு பயணிகளும் இலங்கை, துபாய், அபுதாபி, சவூதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பிரான்ஸ் உள்ளிட்ட விமானங்களில் சர்வதேச பயணிகளும் அதிகளவில் பயணம் செய்துள்ளனர். இதில் பலர் சுற்றுலா பயணிகள் எனக் குறிப்பிடத்தக்கது.

இதனால் கடந்த மே மாதத்தில் மட்டும் இயக்கப்பட்ட 11,708 விமானங்களில் 18,90,638 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் உள்நாட்டு முனையத்தில் இருந்து 8,907 விமானங்களில் 13,70,160 பேரும், சர்வதேச முனையத்தில் இருந்து 2,801 விமானங்களில் 5,20,478 பேரும் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் மட்டும் 1,48,031 பயணிகள் கூடுதலாக அதிகரித்துள்ளனர்.

அதேபோல் விமானங்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தைவிட கடந்த மே மாதம் கூடுதலாக 303 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகின்றன. தென்னிந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் மற்றும் அதிக விமானங்களுடன் சென்னை விமான நிலையம் முன்னணியில் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, சென்னை விமானநிலையத்தை சுற்றுலா பயணிகள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: சென்னை விமானநிலையத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: