வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள கொடும்பாளூர் அதிகார நந்தி வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும்

*வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தல்

விராலிமலை : வரலாற்றில் இடம்பெற்றுள்ள கொடும்பாளூர் அதிகார நந்தி, சுற்றுலா கையேட்டில் அதிகார நந்தி குறித்தான அனைத்து தகவலையும் பதிவிட்டு சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ள செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சிக் காலத்தில் கொடும்பாளூர் வேளிர் சிற்றரசரான மகிமலாய இருக்குவேல் எனும் குஞ்சரமல்லனால் கட்டப்பட்ட அதிகார நந்தி கோயில் இன்றளவும் வரலாற்றின் அடையாளமாக கொடும்பாளூரில் திகழ்கிறது. வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சிவனடியார்கள் போற்றி பாதுகாத்து வரும் அதிகார நந்தி இடங்கழிநாயனார் கோயில் சன்னதி அருகே அமைந்துள்ளது. வரலாற்றின் பெருமையை உணர்த்தும் அதிகார நந்தி சிலையை போற்றி பாதுகாத்து பின் வரும் நம் சந்ததியினர் அறிந்துகொள்ளும் விதமாக சுற்றுலா விழிப்புணர்வு விழாக்கள் நடத்த வரலாற்று ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வரலாற்றில் இடம்பெற்றுள்ள கொடும்பாளூர் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த பழமை வாய்ந்த அதிகார நந்தி சிலை அமைதியான இடம், பழம்பெரும் அரச மரம்,விழுதுகள் சூழ்ந்த ஆலமரம் மற்றும் பல்வேறு வகை மரங்கள் சூழ்ந்து பறவைகளின் பல தரப்பட்ட கீச்சு ஓசைகள் என அதிகார நந்தியை கண்டுகளிக்க செல்பவர்களுக்கு ரம்மியமான ஒரு உணர்வை அள்ளித்தரும் சுற்றுலா தலமாகவும், ஆன்மீக இடமாகவும் அப்பகுதி அமைந்துள்ளது.

விராலிமலையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அதிகார நந்தி சிலை ஒன்பது அடி நீளமும், 6 அடி உயரமும், உடலை சுற்றி 11 அடியும் கொண்டுள்ளது தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள நந்தி சிலையுடன் ஒப்பிடுகையில் இந்த சிலை கலைத்திறன் மற்றும் தோற்றத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. முதலாம் பராந்தகச் சோழனின் இறுதி காலத்தில் கொடும்பாளூர் வேளிர் சிற்றரசனாக இருந்த மகிமாலய இருக்குவேள் எனும் குஞ்சரமல்லன் என்ற அரசன் இந்த அதிகார நந்தி சிலையை நிறுவியதாக வரலாறுகள் கூறுகின்றன.

முசுகுந்தேஸ்வரர் என்று தற்போது அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது இங்குள்ள கல்வெட்டுகளின் படி திருமுதுகுன்றம் உடையார் கோயில் என்றும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இடங்கழிநாயனார் சன்னதியின் முன்னாள் அமர்ந்து கழுத்தை ஒருபுறமாக திருப்பி கொண்டு அன்பு வடிவமாய் கம்பீரமாக காட்சி தருகிறார் இந்த அதிகார நந்தி. இடங்கழி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.

தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராக சோழர் குடியில் தோன்றியவர் கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசை ஆட்சி புரிந்தவர். முன்னொரு காலத்தில் காளை மாடு ஒன்று அருகில் இருந்த வயலுக்குள் சென்று மேய்ந்ததாகவும், அதனை அங்கு வேலை செய்த பெண்கள் விரட்டியதாகவும், அது கோவித்துக் கொண்டு இவ்விடத்தில் மண்டியிட்டு அமர்ந்து அப்படியே சிலையாக மாறியதாக நந்தி சிலைக்கு செவி வழி செய்தியாக அப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் மன்னர்கள் ஆண்ட காலத்தில் இந்த நந்தி சிலையானது கொடும்பாளூர் அருகே உள்ள சத்திரத்திலிருந்து தள்ளு வண்டி மூலம் எடுத்துச் சென்ற போது மணல் நிறைந்த அந்த இடத்தில் சக்கரம் சிக்கி கொண்டு நகர முடியாத காரணத்தால் அந்த இடத்திலேயே நந்தி சிலையை விட்டு விட்டு சென்றதாகவும் அதன் பின்னர் சிவனடியார்கள் அந்த இடத்தில் நந்திக்கு மண்டபம் அமைத்து பின்னர் பிரதிஷ்டை செய்தனர் என்பதற்கான அடையாளம் இருப்பதாக அதிகார நந்திக்கு பூஜை செய்து வழிபட்டு வரும் சிவசேதுராமன் என்பவர் தெரிவிக்கிறார்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த அதிகார நந்தியை உலகறிய செய்ய, தமிழக அரசு போதிய விழாக்கள் நடத்தி சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் விதமாக சுற்றுலா கையேட்டில் கொடும்பாளூர் அதிகார நந்தி குறித்தான தகவலை பதிவிட வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

The post வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள கொடும்பாளூர் அதிகார நந்தி வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: