மதுரை அருகே பாறைப்பட்டியில் கிபி 8ம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு

மதுரை : மதுரை அலங்காநல்லூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் சேர்ந்த கணேசன் கொடுத்த தகவலின்பேரில், மெய்யியல் ஆய்வாளர் ஹாருன் பாஷா மற்றும் ஆசிரியர் விவேக் இருவரும் அப்பகுதியில் கள ஆய்வு நடத்தினர். முட்புதருக்கு நடுவில் 5 செ.மீ ஆரமும், 1 அடி ஆழமும் கொண்ட, குழியுடன் இருக்கும் செக்கு ஒன்றைக் கண்டறிந்தனர். இந்த செக்கிற்கு மேல்புறத்தில் 10 செ.மீ உயரம் கொண்ட 2 வரி தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டும் கண்டறியப்பட்டது. எழுத்துகளின் வரிவடிவம் கிபி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கிறது.

இக்கல்வெட்டில் “கோடன் ( _ _ ?) நாடு இடு ஊர் செக்கு’’ – எனும் செய்தி வெட்டப்பட்டு இருந்தது. கோடன் என்னும் ஊருக்குப் பொதுவாக வெட்டிக் கொடுக்கப்பட்ட செக்கு என்பது அதன் பொருள். ஊருக்கு பொதுவாக எள், ஆமணக்கு போன்ற விதைகளை ஆட்டி, எண்ணை திரிப்பதற்காக இச்செக்குகள் பயன்பட்டன. திருச்சி, விழுப்புரம், தேனி போன்ற இடங்களில் இச்செக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது மதுரையிலும் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

செக்குக்கு அருகில் அதே பாறையில் எண்ணை சேகரிப்பதற்கு தொட்டியும் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் உள்ள கோடன் நாடு என்னும் பெயருக்கு இணையாக இதற்கு அருகில் உள்ள ஊர் கோடாங்கிப்பட்டி ஆகும். மேலும் இங்கு கோடன், காடன் என்னும் பெயரிடும் வழக்கு மக்களிடையே உள்ளது. கல்வெட்டினை தொல்லியல் ஆய்வு மாணவர் பென்சர் படித்து விளக்கினார். மேலும் பல தொல்லியல் தடயங்கள் குழுவினரால் பார்வையிடப்பட்டன.

The post மதுரை அருகே பாறைப்பட்டியில் கிபி 8ம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: